கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய காட்டுசாகை கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவரின் மகன் கவியரசன் என்பவர் கள்ளச் சந்தையில் நாட்டுத் துப்பாக்கி, வாங்கியுள்ளார். அந்த துப்பாக்கியைக் கொண்டு குள்ளஞ்சாவடி அருகே சுமார் 14 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெருமாள் ஏரிக் கரை பகுதியில் உள்ள மான், மயில், காட்டுப்பன்றி, முயல் போன்ற எண்ணற்ற வன விலங்குகளைக் கொன்று குவித்து விற்பனை செய்து பணம் சம்பாதித்துள்ளார்.
மேலும், காட்டுப்பன்றிகள், முயலை வேட்டையாடி, கொன்று, அவற்றுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். கவியரசனின் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், "கள்ளத்தனமாகப் பெற்ற நாட்டுத் துப்பாக்கிகள் மூலம் வன உயிரிகள் அழிக்கப்பட்டுள்ளது. கையில் இருக்கும் நாட்டுத் துப்பாக்கியால் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தும் அபாயமும் உள்ளது. எனவே, வன விலங்குகளை வேட்டையாடும் கவியரசன் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.