
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் கடந்த 08/12/2021 அன்று பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தும் அவரோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத்தும் மேலும் 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் பெங்களூருவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (15.12.2021) அவர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ஏற்கனவே, இந்த விபத்து தொடர்பான உண்மையை ராணுவம் கண்டறிந்து வெளியிடும். அதுவரை யூகங்களையும் வதந்திகளையும் தவிர்க்க வேண்டும் என இந்திய ராணுவம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த ஹெலிகாப்டர் விபத்து பற்றி ஃபேஸ்புக்கில் அவதூறு கருத்து வெளியிட்ட நபர் மீது கோவையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘நான்தான் பாலா’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பிய நபர் மீது இரு பிரிவினரிடையே தீய எண்ணத்தை உருவாக்குதல், அமைதியைக் குலைப்பது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘நான்தான் பாலா’ ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து கருத்தை வெளியிட்ட சரவணம்பட்டியைச் சேர்ந்த நபரை சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தேடிவருகிறார்.