பாஜகவிலிருந்து வந்தவேகத்தில், வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதிக்கு திமுக வேட்பாளராகியிருக்கிறார், எஸ்.கே.வி. என்கிற வேதரத்தினம். இவர், பாஜகவில் இருந்து திமுகவிற்கு முழுமையாக வந்துவிட்டாலும், அவர் பாஜகவின் முன்னால் வேட்பாளர்தான் என்பதை வெளிச்சம்போட்டு காட்டும்விதமாக அவர் வரைந்த சுவர் விளம்பரங்கள் 3-ஆம் சேத்தி உள்ளிட்ட பல இடங்களில் இன்னும் அகற்றப்படாமல் இருக்கிறது. இது திமுகவினரை வருத்தமடையச் செய்திருக்கிறது.
நாகை மாவட்டத்தின் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி திமுகவின் கோட்டையாக இருந்தது. தொடர்ந்து அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்துவந்த வேதரத்தினம், 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிக்கு அத்தொகுதியை ஒதுக்கியதால், தனக்கு சீட் கிடைக்காத கோபத்தில் தனித்துப் போட்டியிட்டு அதிமுகவின் வெற்றிக்கு வித்திட்டார். தற்போது திமுகவில் இருந்துவரும் என்.வி.காமராஜ் எம்.எல்.ஏ. ஆனார். அதேபோல, கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் பாஜவில் ஐக்கியமாகி பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார் வேதரத்தினம். ஆனால், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.எஸ்.மணியன் வெற்றிபெற்று அமைச்சரானார்.
இந்தச் சூழலில் சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் மாநிலப் பொறுப்பு கிடைக்காத அதிருப்தியில் இருந்தவர் மீண்டும் திமுகவில் ஐக்கியமானார். வேதரத்தினம் பாஜகவிற்கு சென்றுவந்தவர், வந்தவேகத்தில் திமுக தலைமை சீட் கொடுக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் வேதரத்தினத்திற்குப் போட்டியிடும் வாய்ப்பை கொடுத்திருக்கிறது திமுக தலைமை.
அதனைத் தொடர்ந்து தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளனர் திமுகவினர். ஆனாலும் 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பாகப் போட்டியிட்டபோது கிராமங்களில் வரையப்பட்ட சுவர் விளம்பரங்கள் இன்னும் அகற்றப்படாமல் அப்படியே இருப்பதும், அதை நெட்டிசன்கள் எடுத்து வைரலாக்குவதும் திமுகவினரை எரிச்சல் அடையவே செய்துள்ளது.
இதுகுறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தோம், "கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை. ஆனாலும், அதிமுகவின் அமைச்சரை எதிர்த்து இங்கு அரசியல் செய்தோம். கஜா புயல், நிவர் புயல், புரெவி புயல் எனப் பல பேரழிவுக் காலங்களில் சொந்தப் பணத்தில் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் நிவாரணம் வழங்கி கட்சியைக் கலகலக்கவிடாமல் கட்டிக்காத்தோம். இருந்தபோதும் தற்போது எஸ்.கே.வி.க்கு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பரவாயில்லை, கட்சிக்காக உழைக்கலாம் என்றாலும், தற்போது சுவர் விளம்பரம் செய்யக் கால அவகாசம் இல்லாததால், அவர் ஏற்கனவே வரைந்த சுவர் விளம்பரங்கள் இன்றுவரை அழியாச் சின்னமாக இருப்பது சிறு வருத்தத்தை தருகிறது" என்கிறார்கள்.