சென்னையடுத்த செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் இயங்கிவந்த சுஷில் ஹரி ரெஸிடென்ஷியல் பள்ளியின் நிறுவனர், சிவசங்கர் பாபா மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பாக அப்பள்ளி மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின்படி அவர், நீதிமன்ற காவலில் செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், மேல் சிகிச்சை தேவைப்பட்டதால், அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்த பின்னர் அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சிவசங்கர் பாபாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நேற்று செங்கல்பட்டு போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவசங்கர் பாபா இந்த விசாரணைக்கு அழைத்துவரப்பட்டார். இந்த விசாரணையின்போது, சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தரப்பில், சிவசங்கர் பாபாவை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர்.
இதை விசாரித்த நீதிமன்றம், சிவசங்கர் பாபாவை மூன்று நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று, போலீஸ் காவலில் விசாரணைக்காக சிவசங்கர் பாபா, சென்னை எழும்பூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டார். அதனைத் தொடர்ந்து இன்று சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்துச் சென்று சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். நீதிமன்றம் வழங்கிய மூன்று நாள் அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், விசாரணை முடிந்ததால் இன்று மாலையே அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட இருக்கிறார் என சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.