திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே வாரந்தோறும் சனிக்கிழமையன்று நடைபெறும் ஆட்டுச் சந்தையில் முறைகேடாக வரி வசூல் செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட ஆட்டுச் சந்தை மைதானம் உள்ளது. இதனைப் பேரூராட்சி சார்பில் சில விதிமுறைகளின் அடிப்படையில் ஒப்பந்தம் விடப்படுவது வழக்கம். அவ்வாறு ஒப்பந்த உரிமம் பெற்றவர்கள், ஆட்டுச் சந்தைக்கு விற்பனைக்காக ஆடுகளை ஏற்றி வரும் லாரிகள் மற்றும் விலைக்கு ஆடுகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு மட்டும் பேரூராட்சி விதிமுறைகளின்படி அரசு நிர்ணயித்த வரியை வசூல் செய்ய வேண்டும் என்பது விதிமுறை.
இந்நிலையில் சமயபுரம் ஆட்டுச் சந்தைக்கு வாரந்தோறும் சனிக்கிழமை அன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வாகனங்கள் மூலம் ஆடுகளை விற்பனைக்காக ஏற்றி வருகின்றனர். மேலும் ஏராளமான பொதுமக்களும் பல்வேறு காரணங்களுக்காக ஆடுகள் வாங்க சந்தையில் குவிகின்றனர். இதனை லாபகரமாகப் பயன்படுத்த நினைக்கும் ஒப்பந்த உரிமம் பெற்றவர்கள் அரசு நிர்ணயித்த 15 ரூபாயை விட 4 மடங்கு அதிகமாக வசூல் செய்வதாகவும் அதற்காக உரிய ரசீது வழங்குவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆட்டு சந்தைக்கு வந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கவி என்பவர் கூறுகையில்,ஆட்டுச் சந்தைக்கு வரும் வாகனங்கள் மட்டுமின்றி ஆடுகளை வாங்க வருபவர்களிடமும் வரி வசூலிக்கப்படுகிறது. ஆடுகளை வாங்கிக்கொண்டு சந்தையை விட்டு வெளியே செல்லும் பொழுது டோக்கன் கேட்கிறார்கள் அதற்காக டோக்கன் வாங்கும் பொழுது 60 ரூபாய் அச்சிட்ட டோக்கன்கள் வழங்கப்படுகிறது. ஆனால் 70 ரூபாய் வசூலிக்கிறார்கள். இது இரண்டுமே முறைகேடான ஒன்று.
அரசு நிர்ணயித்த தொகை 15 ரூபாயை விட இவர்கள் முறைகேடாக நான்கு மடங்கு அதிகமாகப் பணம் வசூல் செய்கிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஆட்சியரிடம் மனு கொடுப்போம். அதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபடும் போராட்டம் நடத்துவோம்" எனக் கூறினார்.