பொங்கல் திருநாளன்று அவனியாபுரத்திலும் அதற்கு மறுநாள் பாலமேட்டிலும் அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் குறித்த பதிவு இணையதளத்தில் நடந்தது.
இந்நிலையில் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அழைத்துவரப்பட்ட காளை ஒன்று மருத்துவ சோதனையில் உடல் தகுதி பெறாததால் காவலர்கள் காளையை வெளியேற்ற உத்தரவிட்டனர். அப்பொழுது காளையை அழைத்துவந்த சிறுவன் தனது காளையை ஜல்லிக்கட்டில் அனுமதிக்குமாறு கண்ணீர் விட்டு அழுதான். சுற்றி இருந்த காவலர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் காளையையும் அச்சிறுவனையும் வெளியேற அறிவுறுத்தினர். ஆனாலும் தொடர்ந்து அந்த சிறுவன் தன் காளை ஜல்லிக்கட்டில் பங்கேற்க வேண்டும் என அழுது புலம்பினான். அடுத்த ஜல்லிக்கட்டில் காளையை பங்கேற்க வைக்க ஏற்பாடு செய்வோம் எனக் கூறி சிறுவனை வெளியேற்றினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.