மிகப் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் செய்ப இயலாத துணிச்சலான செயல்பாடுகளை சிறு நிறுவனமாக தொடங்கப்பட்டு அவர்களின் நேர்மையான உழைப்பால் உயர்ந்து நல்ல சேவைகள் செய்யும் நம்ம ஊர் தொழில் நிறுவனங்களும் இருக்கத்தான் செய்கிறது. அப்படி உழைப்பின் மூலமே உயர்ந்து இன்று சமையல் மசாலா பொருட்கள் தயாரிப்பாளர்களில் முதல் இடத்தில் இருப்பவர்கள் ஈரோட்டைச் சேர்ந்த சக்தி மசாலா நிறுவனம்.
திரு. P.C.துரைசாமி அவரது துணைவியார் சாந்தி துரைசாமி ஆகியோர் தான் இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். சம்பளம் கொடுத்தால் தொழிலாளர்கள் வேலை செய்வார்கள் என்ற முதலாளித்துவ சிந்தனையில்லாமல் தொழிலாளர்களின் குடும்ப நலனிலும் அக்கரை செலுத்துகிறார்கள். அதே போல் உங்களால் எந்த வேலையும் செய்ய முடியாது என சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்படுபவர்களான கண், கை, கால் என உடல் உறுப்பில் குறைபாடு இருக்கிற மாற்றுத்திறனாளிகளுக்கு "உங்களால் முடியும். உழைப்புக்கு எதுவும் தடையில்லை" என அவர்களுக்கு வாழ்வியல் நம்பிக்கை கொடுத்து அப்படிப்பட்டவர்களை தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய வைத்துள்ளார்கள் இந்த தொழிலதிபர்கள்.
கடந்த 30 வருடங்களாக ஆயிரக்கணக்கான மாற்று திறனாளிகள் இந்நிறுவனத்தில் பணிபுரிந்து சுயமாக உழைப்பின் மூலம் தங்களின் குடும்ப வறுமையை அகற்றியுள்ளார்கள் இந்த கரோனா காலத்திலும் தற்போதும் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் பணி புரிகிறார்கள். இதற்காக இவர்களுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளது. இன்று இந்திய நாட்டின் 74 வது சுதந்திர தினம் இதில் சிறப்பு வாய்ந்த, திறமை கொண்டவர்களுக்கு விருது கொடுப்பது தமிழக அரசின் வழக்கம்.
அதன்படி இன்று சக்தி மசாலா நிறுவனத்திற்கு மாற்று திறனாளிகளின் மேம்பாட்டுக்கு தொடர்ந்து செயல்படுவதற்கு தமிழக அரசின் சிறப்பு விருதினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். விருது பெறுவதற்கு தகுதியானவர்கள் என்பது அவர்களின் எளிமையான செயல்பாடுகளே சாட்சி.