கொடூர வைரஸான கரோனாவிற்கு உலக நாடுகளே நடுங்கி நிற்கும் நிலையில் இந்தாயாவில் முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடே வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் போது, கும்பகோணம் அருகே எளிய முறையில் திருமணம் ஒன்று நடைபெற்றிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் 20 நபர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
கும்பகோணம் அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சிவஜோதிக்கும், ஏரவாஞ்சேரியைச் சேர்ந்த கார்த்திகா என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமணத்தை 27ம் தேதி திருமண மண்டபத்தில் பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா எதிரொலியால் திருமணம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
இருந்த போதிலும் திருமணம் நடத்தியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்த இரு குடும்பத்தினரும், உறவினர்களை பெரிதாக அழைக்காமல் வீட்டிற்கு அருகே உள்ள கோயிலில் எளிய முறையில் நடத்தி முடித்தனர்.
திருமணத்தில் 20 பேர்கள் மட்டுமே கலந்துகொண்ட போதிலும், அவர்கள் அனைவரும் கைகளை சோப்பால் சுத்தமாக கழுவிய பின்னரே திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். திருமணத்திற்கு முன்பும் பின்பும் கோயிலில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. திருமணம் நடந்த அரை மணி நேரத்திலேயே அனைவரும் கலைந்து அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.