மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுக்க தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அந்த சட்டங்களால் விவசாயிகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விவசாயிகளிடம் நேரில் விளக்கி அதற்கு எதிராக கையெழுத்து பெறும் இயக்கம் ஈரோட்டில் நடந்தது.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒரு லட்சம் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளிகளிடம் கையெழுத்து வாங்கி அதை தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் ஆகியோரிடம் வழங்கப்படும் என அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று விவசாயிகளிடம் கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மொடக்குறிச்சி அடுத்த நாதகவுண்டம் பாளையத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளிகளிடம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜன் கையெழுத்து வாங்கினர். மேலும் வேளாண்மை சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிக் கூறும் வகையில் அவர்களுக்கு துண்டு பிரசுரமும் வழங்கினர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம். பழனிசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஒருவாரத்திற்கு கையெழுத்து இயக்கம் நடைபெறும் என்று ராஜன் கூறினார்.