கடந்த ஜன.08 அன்று குமரி மாவட்டம் களியாக்காவிளை செக்போஸ்ட்டில் எஸ்.எஸ்.ஐ.வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டது தென் மாவட்டங்களை உலுக்கியெடுத்த சம்பவம். அது தொடர்பாக அதே மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல்சமீம் தவுபீக் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு செக்போஸ்ட் அருகில் உள்ள நெய்யாற்றின் கரையில் தங்கிச் செயல்பட வீடு எடுத்துக் கொடுத்து உதவியதாக இருந்த புன்னைக்காட்டு வினைப் பகுதியின் செய்யது அலி தேடப்பட்டு வந்தவர். தற்போது இவர் எஸ்.ஐ.டி.வசம் சிக்கியுள்ளார். விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை அந்த டீமிடம் தெரிவித்தாகத் தெரிகிறது.
சிக்கிய செய்யது அலி (27) கம்யூட்டர் இன்ஜினியர். சிரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இஸ்லாமிக் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தோ சிரியன் எனப்படுகிற ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற உலக பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர். அண்மையில் டெல்லியில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்.சின் ஏஜெண்ட்டான கடலூர் காஜா மொய்தீன் என்பவரின் தலைமையிலான டீமிற்கு, உளவு போலீஸ், தவிர வேறு எந்த அமைப்பும் இவர்களின் தகவல்களை இடைமறிக்க முடியாத அளவிற்கான நுண்ணிய அளவிலான தொழில் நுட்பங்களைக் கொண்ட சாப்ட்வேர் அமைத்துக் கொடுத்ததையும் சொன்னவர், அதுபற்றிய குறிப்புக்களைத் தெரிவிக்க மறுத்தார்.
தமிழ்நாடு நேஷனல் லீக் அமைப்பிற்கு நிதி சேகரித்து அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், தவுபீக், அப்துல் சமீம் ஆகியோரை அடிக்கடி தொடர்பு கொண்டதாக தெரிவித்த செய்யது அலி, ஐ.எஸ்.ஐ.எஸ்.சின் திட்டங்களை நிறைவேற்ற 15 பேர்களைத் தயார்படுத்தியதாகத் தெரிவித்துள்ளாராம். மேலும் பிற பகுதிகளில் பிடிபட்டவர்களோடு இவருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா, என்றும் விசாரணை போகிறதாம்.