கோவையில் கொலைவழக்கில் கைதானவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சத்தியபாண்டி கொலைவழக்கின் குற்றவாளிகள் ஏற்கனவே கைதாகி இருந்த நிலையில், வழக்கின் முக்கியக் குற்றவாளியான சஞ்சய் ராஜா சமீபத்தில் போலீஸில் சரணடைந்தார். இதையடுத்து சஞ்சய் ராஜாவை போலிசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவர் துப்பாக்கி பயன்படுத்தி வருவதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
‘எனது துப்பாக்கியை நான் ஒரு இடத்தில் மறைத்து வைத்திருக்கிறேன். என்னுடன் வாருங்கள். அதனை எடுத்து தருகிறேன்’ என்று சஞ்சய் ராஜா கூறியதை கேட்டு, அவரை கரடுமேடு முருகன் கோவில் அருகே அழைத்து சென்ற போலீசாரை, பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென சஞ்சய் ராஜா சுட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அங்குள்ள மறைவான இடங்களில் தங்களை மறைத்துக் கொண்டுள்ளனர். இருப்பினும், தொடர்ந்து சஞ்சய் ராஜா போலீசாரை நோக்கி சுட்டிருக்கிறார். இதனால் தங்களை தற்காத்துக்கொள்ள போலீசார் சஞ்சய் ராஜாவின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி மறுபடியும் பிடித்துள்ளனர். இதில் அவரது இடது காலில் காயம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.