கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் கேரளாவில் ஷவர்மாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷவர்மா போன்ற உணவுகள் தயாரிக்கப்படும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் திருவள்ளூரில் ஷவர்மா பயன்படுத்த வைத்திருந்த 25 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டதோடு கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஷவர்மா போன்ற வெளிநாட்டு உணவுகளை உண்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்திலுள்ள சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் வளாகத்தில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்தநிகழ்வில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் பங்குபெற்றார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், ''ஷவர்மா போன்ற வெளிநாட்டு உணவுகளை உட்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். அண்மையில் தமிழ்நாட்டில் ஒரு இடத்திலும், கேரளாவில் இரண்டு மூன்று இடங்களிலும் ஷவர்மா சாப்பிட்டதால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷவர்மா ஒரு மேலைநாட்டு உணவு. பழைய மாமிசத்தை எல்லாம் ஒட்டுமொத்தமாகச் சுருட்டி வைத்து அதைச் சுரண்டி சுரண்டி கொடுப்பார்கள். அது மாதிரியான உணர்வு அது. அது மேலைநாடுகளில் அங்கே இருக்கும் தட்பவெப்ப நிலைக்கும் பொருந்தும். அங்கிருக்கும் மைனஸ் டிகிரி வெப்பநிலையில் வெளியில் வைத்திருந்தாலும் அவை கெட்டுப் போகாது. நாள்பட்ட மாமிசம் எதுவாக இருந்தாலுமே சரியான ஃபிரீஸிங் வசதி இல்லை என்றால் அது கெட்டுப் போய்விடும். கெட்டுப்போன உணவை சாப்பிடுவது என்பது எந்த நாட்டில் உள்ளவர்களாக இருந்தாலும் பாதிப்பு ஏற்படும். இளைஞர்கள் இதனை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்பதால் நிறையப் பேர் 'ஷவர்மா'... ஷவர்மா...' என்று விற்க ஆரம்பித்துவிட்டார்கள். நாம் உண்ணும் உணவை நமது தட்பவெட்ப நிலையை ஏற்றுக் கொள்ளுமா என்பது தெரியாமல் வியாபார நோக்கத்திற்காக மட்டும் விற்கிறார்கள். எனவே இது போன்ற வெளிநாட்டு வகை உணவுகளை மக்கள் உண்பதை தவிர்ப்பது நல்லது'' என்றார்.
அப்பொழுது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், 'கேரளாவில் ஷவர்மா தடை செய்யப்பட்டதுபோல் தமிழகத்திலும் தடை செய்யப்படுமா?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ''அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறோம். பாதுகாப்பு வசதி இல்லாத, அந்த உணவை தயாரிப்பதற்கான அடிப்படை வசதி இல்லாத கடைகளை எல்லாம் மூட வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம்'' என்றார்.