பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை :
’’மாவட்டத்திலுள்ள தனியார் கலை - அறிவியல் கல்லூரியில் பணியாற்றிய நிர்மலா தேவி என்ற உதவிப் பேராசிரியர், சில பெரிய மனிதர்களின் பாலியல் தேவைகளுக்கு இணங்க வேண்டும் என்று தமது மாணவிகளைக் கட்டாயப்படுத்தும் குரல் பதிவு வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய உதவிப் பேராசிரியை, சில பெரிய மனிதர்களின் கைப்பாவையாக மாறி, மாணவிகளை சாக்கடையில் தள்ள முயன்றிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் அறிவியல் கணிதப் பிரிவில் மூன்றாம் ஆண்டு பயிலும் 4 மாணவிகள் தான் நிர்மலா தேவியால் பாலியல் தேவைகளுக்கு இணங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த நான்கு மாணவிகளிடமும் செல்பேசியின் ஒலிப்பெட்டி (ஸ்பீக்கர்) மூலம் பேசிய உதவிப் பேராசிரியை, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு பல்வேறு வசதிகளை செய்து தர வேண்டிய உயர்பதவியில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதற்காக அந்தக் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்ப்பதாகவும் கூறுகிறார். அதற்கு சம்பந்தப்பட்ட மாணவிகள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கப்படும்; பட்ட மேற்படிப்பில் எளிதாக இடம் வாங்கித் தருவதுடன், அதிலும் அதிக மதிப்பெண் வாங்கித் தரப்படும்; இதற்கெல்லாம் மேலாக அவர்கள் பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அதில் மாதந்தோறும் நினைத்துப் பார்க்க முடியாத தொகை வரவு வைக்கப்படும் என்றும் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி ஆசை காட்டுகிறார்.
பேராசிரியையின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போகும் மாணவிகள், அதெல்லாம் தங்களுக்கு ஒத்துவராது என்று உடைந்த குரலில் கூறுகின்றனர். அதைப் பொருட்படுத்தாத நிர்மலா தேவி, ‘‘ நீங்கள் உங்களின் பெற்றோரிடம் தெரிவித்து விட்டு கூட இந்த திட்டத்திற்கு உடன்படலாம். இதுபோன்ற வாய்ப்புகள் எப்போதாவது தான் கிடைக்கும். கல்வி சார்ந்த அனைத்து விஷயங்களையும் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் மூலம் சாதித்துக் கொள்ளலாம். காமராசர் பல்கலைக்கழகத்தை முடிந்தவரை பயன்படுத்திக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான ‘செட்’ தேர்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெற ஏற்பாடு செய்கிறேன்’’ என்றும் மூளைச்சலவை செய்கிறார். அதற்கும் மாணவிகள் உடன்படாத நிலையில், அடுத்த 3 நாட்களில் பதில் கூறும்படியும், இவ்விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்றும் நிர்மலா தேவி கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, ஆளுனருக்கு அருகில் நின்று வீடியோ எடுக்கும் அளவுக்கு தமக்கு செல்வாக்கு இருப்பதாகவும், தம்மால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்றும் நிர்மலாதேவி கூறியுள்ளார்.
கல்லூரிகள் கல்வியையும், நீதி, நேர்மை, ஒழுக்கம் போன்ற வாழ்க்கை நெறிகளையும் கற்றுத்தர வேண்டிய இடமாகும். அங்கு பணியாற்றும் ஆசிரியர்களை மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோருக்கு இணையாகவும், கடவுளாகவும் பார்க்கின்றனர். அத்தகைய உயர்ந்த இடத்தில் இருந்து மாணவிகளை வழிநடத்தியிருக்க வேண்டிய பேராசிரியை ஒருவர், பாலியல் தரகர் நிலைக்கு இறங்கி, மாணவிகளுக்கு பாலியல் வலை வீசியிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். இது அவர் ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயமாகத் தோன்றவில்லை. பாலியல் தேவைகளை நிறைவேற்றும் மாணவிகளுக்கு தேர்வுகளில் அதிக மதிப்பெண், உயர்கல்வியில் இடம், மாதம் தோறும் பணம், வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகளிலும், தகுதித் தேர்வுகளிலும் வெற்றி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்படுவதைப் பார்க்கும் போது, அதிகாரத்தில் உயர்நிலையில் உள்ள யாரோ ஒரு பெரிய மனிதரின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காகத் தான் கல்லூரி மாணவிகளை இணங்க வைக்க முயற்சி நடந்துள்ளது என்பதை உணர முடிகிறது. சமுதாயத்தின் புற்றுநோயான அந்த பெரிய மனிதரையும், அவருக்காக அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட காமராசர் பல்கலைக்கழக நிர்வாகிகளையும் அம்பலப்படுத்த வேண்டியது அவசியம். மாணவிகளிடமும், மற்ற பெரிய மனிதர்களிடமும் 095241 36928 என்ற செல்பேசி எண்ணில் தான் நிர்மலாதேவி பேசியுள்ளார். இப்போது செயலிழக்கச் செய்யப்பட்டுள்ள அந்த எண்ணிலிருந்து செய்யப்பட்ட அழைப்புகளை கண்டறிந்தாலே இதன் பின்னணியில் உள்ள பெரிய மனிதர்களைக் கண்டுபிடித்து விடலாம்.
உயர்கல்வித் துறையில் இத்தகையக் கலாச்சாரம் பரவியிருப்பது கவலையும், வேதனையும் அளிக்கிறது. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காகத் தான் கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள்; அப்பிள்ளைகளை பாதுகாக்க வேண்டிய கல்லூரிகளும், கல்லூரி ஆசிரியைகளும் தங்களின் சுயநலனுக்காக அப்பாவி மாணவிகளை சீரழிக்கும் செயலில் ஈடுபட்டால் அவர்கள் மன்னிக்கப்படக் கூடாது; கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
ஏழை மாணவிகளை இழிவான செயலில் ஈடுபட வலியுறுத்தியதுடன், பெற்றோரிடம் தெரிவித்து அவர்கள் ஒப்புதலுடன் இந்த செயலில் ஈடுபடலாம் என்று கூறுவதன் மூலம், ஏழைகள் பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்று மட்டமாக சிந்திக்கும் நிர்மலாதேவி போன்றவர்கள் சமுதாயத்தின் சாபக்கேடுகள். இவர்களைப் போன்றவர்கள் கல்வித்துறையில் இருப்பதால் ஏழைப் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பாமல் இருப்பதற்கான ஆபத்து உள்ளது. இதை தடுக்க வேண்டும்.
மாணவிகளுக்கு உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி பாலியல் வலை வீசியது அம்பலமானதுடன், அது தொடர்பான ஒலிப்பதிவு வெளிவந்த பிறகும் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் சாதாரணமாக 15 நாட்களுக்கு பணியிடை நீக்கம் மட்டுமே செய்யப்பட்டு உள்ளார். ஆனால், காமராசர் பல்கலைக்கழக நிர்வாகிகள் உதவியுடன் அதை தம்மால் சமாளித்துவிட முடியும் என்றும் நிர்மலா தேவி கூறுகிறார். அதிகாரத்தின் உச்சந்த்தில் உள்ளவர்களின் ஆதரவின்றி இவ்வளவு துணிச்சலுடன் பேச முடியாது. எனவே, மாணவிகளுக்கு பாலியல் வலை வீசிய உதவிப் பேராசிரியை நிர்மலா தேவியை உடனடியாக கைது செய்ய வேண்டும். இதன் பின்னணியில் உள்ள பெரிய மனிதர்களை வெளிக்கொண்டு வரும் வகையில் இந்தக் குற்றச்சாற்று குறித்து உடனடியாக நடுவண் புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.