விமானப்படை பெண் அதிகாரிக்கு இருவிரல் மருத்துவ பரிசோதனை செய்ததற்குத் தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்து விமானப்படை தலைமை தளபதிக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. கோவை ரெட்ஃபீல்டில் உள்ள விமானப்படை கல்லூரியில் டெல்லியைச் சேர்ந்த 28 வயதான பெண் அதிகாரி உள்ளிட்ட சில அதிகாரிகள் பயிற்சி பெற்றுவந்தனர். இந்த நிலையில், அதே கல்லூரிக்குப் பயிற்சிக்காக வந்த சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அமித்தேஸ் (30) என்பவர் அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அந்தப் பெண் கோவை மாநகரக் காவல் ஆணையர் தீபக் தாமோரை சந்தித்து புகார் அளித்தார்.
இதையடுத்து கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து அமித்தேஸை கைது செய்து, உடுமலை கிளைச் சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவருகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, “கடந்த ஒன்பதாம் தேதி கூடைப்பந்து பயிற்சியின்போது காயம் ஏற்பட்டது. அதற்கு வலி நிவாரணி மருந்து எடுத்துக்கொண்ட பிறகு, பயிற்சி கல்லூரியில் உள்ள பாருக்குச் சென்றேன். அங்கு அமித்தேஸ் இருந்தார். நான் என் தோழிகளுடன் சேர்ந்து அங்கு மது வாங்கிக் குடித்தேன். வாந்தி, மயக்கம் வந்ததால், தோழிகள் உதவியுடன் எனது அறைக்குச் சென்றேன்.
பின்னர் எனது அறைக்கு வந்த அமித்தேஸ், நான் மயக்க நிலையில் இருந்ததைப் பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக எனது உயரதிகாரிகளிடம் தெரிவித்தேன். அவர்கள் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதா என கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்யக் கூறினர். பின்னர் பயிற்சி கல்லூரியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு டாக்டர்கள் எனக்கு இருவிரல் பரிசோதனை செய்தனர். இந்தப் பரிசோதனை செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதனையும் மீறி அவர்கள் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக புகாரளிக்க வேண்டாம் எனவும், இருவரின் சம்மதத்துடன் சம்பவம் நடந்ததாக கூற வேண்டும் எனவும் எனக்கு நெருக்கடி அளித்தனர்.
என்னிடம் இருந்த ஆதாரங்களை வாங்க முயற்சி செய்தனர். கடந்த 10ஆம் தேதி நடந்த சம்பவத்திற்கு 20ஆம் தேதி வரை கல்லூரி சார்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் போலீசில் புகார் அளித்தேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது முதல் தகவல் அறிக்கையிலும் உள்ளது. விமானப்படை பெண் அதிகாரிக்கு இருவிரல் பரிசோதனை செய்ததைக் கண்டித்து இந்திய விமானப்படை தலைமை தளபதிக்குத் தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ‘பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உண்மைதானா? என்பதைக் கண்டறிய இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டிருப்பது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. தடை செய்யப்பட்ட பரிசோதனை மேற்கொள்வது கண்டனத்திற்குரியது. இருவிரல் சோதனை அறிவியலுக்குப் புறம்பானது என இந்திய மருத்துவ ஆய்வு கழகம் 2014இல் தடை செய்துள்ளது. இந்திய விமானப்படையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.