தமிழகத்தில் கரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், வரும் செப். 1ம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான முன்ஆயத்தக் கூட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது.
இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆட்சியர் கார்மேகம் சனிக்கிழமை (ஆக. 21) விரிவான ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
கரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளை இயக்க வேண்டும். 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 50 சதவீத மாணவர்களுடன் மட்டுமே பள்ளிகள் செயல்பட வேண்டும்.சேலம் மாநகராட்சி மற்றும் மாவட்டப் பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்பறைகள், குடிநீர் தொட்டிகள், கழிப்பறைகள் மற்றும் பள்ளி வளாகம் ஆகியவற்றை சுத்தப்படுத்தி, கிருமிநாசினி தெளித்திட வேண்டும்.
அன்றாடம் பள்ளி தொடங்கும் முன்பும், பள்ளி முடிந்த பிறகும் இரு வேளைகளிலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.பள்ளி திறப்பிற்குப் பிறகு, அனைத்து பள்ளிகளிலும் மருத்துவக் குழுக்கள் மூலம் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும், கரோனா நோய்த்தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பரங்களை அனைத்துப் பள்ளிகளிலும் வைக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திட சிறப்பு முகாம் ஏற்படுத்தி, உரிய நடவடிக்கைகளை சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாணவ, மாணவிகள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வர ஏதுவாக அனைத்து வழித்தடங்களிலும் அரசுப்பேருந்துகளை போதுமான அளவில் இயக்க வேண்டும்.பள்ளியைச் சுற்றியுள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவப் பணியாளர்கள், நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளின் விவரங்களை உடனுக்குடன் வழங்கி அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்து, மாணவ, மாணவிகளுக்குத் தேவையான வைட்டமின், ஸிங்க் மாத்திரைகளை வழங்க வேண்டும்.
விடுதிகளில் மாணவ, மாணவிகள் தங்கும் அறைகள், சமையல் அறை, குடிநீர் தொட்டிகள், கழிப்பறைகள், விடுதி வளாகம் ஆகியவற்றை சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்.பள்ளி திறப்பு தொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டும்.பள்ளித்திறப்பிற்கு முன் அனைத்துத் தனியார் பள்ளிகளின் போக்குவரத்து வாகனங்களை தணிக்கை செய்து நல்லமுறையில் உள்ளதையும், தனியார் பள்ளிகளின் போக்குவரத்து வாகனங்களில் கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுவதையும், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டும்.
பள்ளிகளின் கட்டட மராமத்துப் பணிகளையும், மின் மராமத்துப் பணிகளையும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடன் மேற்கொள்ள வேண்டும்.மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளை தினமும் ஆய்வு செய்து கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட கூடுதல் இயக்குநர் (வளர்ச்சி) ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.