சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி வருபவர் ஜி.ஆர். சுவாமிநாதன். இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள கோயிலில் எச்சில் இலைகளில் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து இந்த உத்தரவை சுட்டிக்காட்டி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டிற்கு திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கு. ராமகிருஷ்ணன் ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக கொளத்தூர் மணி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டிற்கு எழுதியுள்ள கடிதத்தில், “சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான மணிக்குமார், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் எச்சில் இலைகளில் வேறு சிலர் படுத்து உருளுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற சடங்கு தொடர்பான வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளார்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுகிறார். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தந்துள்ள சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் குறித்து விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நீதிபதியாக ஜி. ஆர். சுவாமிநாதன் தொடர்வதற்கு தகுதி இல்லை” எனத் தெரிவித்துள்ளார். இதே போன்ற கருத்தையும் தந்தை பெரியார் திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கு. ராமகிருஷ்ணனும் தெரிவித்துள்ளார்.