தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தனது ட்விட்டர் பதிவில் ‘திமுகவின் ஃபைல்கள்’ எனக் குறிப்பிட்டு ‘ஏப்ரல் 14, 2023 - காலை 10:15’ எனக் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அவர் பதிவிட்ட காணொளியில் திமுகவின் முக்கிய தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருந்தன. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை தனது ரஃபேல் வாட்ச் ரசீதை வெளியிட்டார். தொடர்ந்து திமுக அமைச்சர்கள் குறித்த வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தினார். அந்த வீடியோவில் திமுகவை சேர்ந்த முக்கியமானவர்களின் சொத்து மதிப்புகள் குறித்து காட்சிகள் இருந்தன.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், ''இந்த நாட்டில் இருக்கக்கூடிய எல்லாருக்கும் தெரியும் அவர்களுக்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது, எவ்வளவு சம்பாதித்தார்கள் என்று. இது ஒன்றும் புதிய தகவலல்ல. ஆனால் இதன் மேல் மத்தியில் ஆளும் பாஜக என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள். திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ளதால் நீங்கள் கூட்டணி வைத்திருக்கின்ற அதிமுக புனிதர்கள் இருக்கும் இடம் கிடையாது. அதையும் வெளியிட வேண்டும். இரண்டு பக்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் செய்த கட்சிகளோடு இனி கூட்டணி கிடையாது என்ற அறிவிப்பைக் கொடுக்க வேண்டும். அண்ணாமலைக்கு வைக்கின்ற வேண்டுகோள் இதன் மீது நடவடிக்கை எடுங்கள். தெரிந்த செய்தியை சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இது ஒன்றும் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பு அல்ல. நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் அந்த பக்கம் ஆட்சியிலிருந்தவர்கள் எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார்கள், எவ்வளவு சம்பாதித்து இருக்கிறார்கள், எவ்வளவு ஊழல் செய்திருக்கிறார்கள் என்பதையும் வெளியிட வேண்டும், அதுதான் நடுநிலைமையான நேர்மையாக இருக்கும், நீங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் அங்கு வாய் மூடிக்கொண்டு அமைதியாக இருக்கக் கூடாது'' என்றார்.
தொடர்ந்து பேசிய சீமான், ''கலாசேத்திராவில் கட்சி கட்சிக்காரர்கள் இல்லை. மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் திமுககாரர் இருக்கிறார். அதனால் கேட்பதற்கு நாதி இல்லை. எங்களைப் போன்றவர்கள் அறிக்கை கொடுக்கிறோம், அழுத்தம் கொடுக்கிறோம். ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டுமே. தவறு செய்தது சொந்த கட்சிக்காரனாக இருந்தாலும், யாராக இருந்தாலும் சரியானவர்கள் பக்கம் நிற்க வேண்டும் அவன் தான் நேர்மையான ஆட்சியாளன்''என்றார்.