மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “அண்ணாமலை தன்னை தானே கலைஞர், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். என சொல்லி அடையாளப்படுத்திக்கொள்கிறார். பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளில் தலைவர் என சொல்ல முடியாது. ஏறக்குறையை ஒருவரை இரண்டுவருடங்கள் வைப்பார்கள். பிறகு வேறு ஒரு நபரை தலைவராக்குவார்கள். பொன் ராதாகிருஷ்ணன் எங்கே? அவர் கட்சிக்காக உழைக்காததா. தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசு என காங்கிரஸுக்கு பல தலைவர்கள். இந்திய ஒன்றிய கட்சிகள் எந்த மாநிலத்திலும் நிரந்தரமாக ஒரு தலைவரை வைக்காது. அதுவெல்லாம் பெருந்தலைவரோடு முடிந்துவிட்டது. அதிகபட்சம் அண்ணாமலையை இந்த பாராளுமன்றத் தேர்தல் வரை இழுத்துவருவார்கள். அதன் பின் அதில் ஏதும் முன்னப்பின்ன ஆனதென்றால் அவரை மாற்றிவிட்டு புதியதாக ஒரு தலைவரை கொண்டுவருவார்கள்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், ‘ஆளுநர் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாவில் ஒரு மாணவரை ஆடையெல்லாம் கலைத்து சோதனை செய்தார்கள்’ என கேட்டனர். அதற்கு பதில் அளித்த சீமான், “இது மிகவும் கொடுமையானது. மானுட உரிமைக்கே எதிரானது. இன்னும் சிறை கூடங்களில் இவையெல்லாம் இருக்கிறது. நாங்கள் எல்லாம் சிறைக்கு செல்லும்போது, உடைகளை எல்லாம் கலைத்து நிர்வாணப்படுத்தி சோதித்து தான் அனுப்பினார்கள். நான் ‘அப்படியே உள்ளே போகிறேன்’ என்றேன். மக்களுக்காக போராடுபவர்களை ஏதோ சர்வதேச பயங்கரவாதி போல் நிர்வாணப்படுத்தி சோதிப்பார்கள்” என்றார்.
மேலும், பொன்னியின் செல்வன் படத்தில் தமிழர்களின் வரலாற்றை மிகவும் இழிவாக எடுத்திருக்கிறார்கள். ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்துகொள்வதுபோல் காட்சி படுத்தியிருக்கிறார்கள் என விமர்சனங்கள் எழுகிறதே’ என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில அளித்த சீமான், “இதை இவ்வளவு ஆய்வு செய்யவேண்டியது இல்லை. அது ஒரு புதினம். பொன்னியின் செல்வன் எங்கள் இனத்தின் வரலாறு கிடையாது. கற்பனையில் அதனை எழுதும்போது அதனை திரிவுடன் தான் எழுதினார்” என்றார்.