ஆதார் தனிமனித ரகசிய உரிமைக்கு எதிரானது - உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது; கி.வீரமணி
ஆதார் அட்டை குறித்து உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பு, பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோல் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
நேற்று (24.8.2017) மாலை வந்த இரண்டு செய்திகள் மிகவும் வரவேற்கத்தக்கன. ஒன்று, உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு ஆதார் குறித்து அளித்த தீர்ப்பு, தனி மனிதர்களின் ரகசிய உரிமை என்பது பறிக்கப்படக்கூடாத அடிப்படை உரிமை என்பதை ஒருமித்து உறுதி செய்துள்ளது!
பிரதமர் மோடியின் மத்திய அரசு, தனி மனித ரகசியம் என்பது அடிப்படை உரிமையல்ல என்று வழக்கில் வாதாடியதை, அனைத்து நீதிபதிகளும் ஏற்க மறுத்து, இவ்வாறு வழங்கியுள்ள இத்தீர்ப்பானது - ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, அடிப்படை உரிமைக் காப்பு அரண்போன்ற தீர்ப்பாகும்!
தனிமனித ரகசியம் முக்கியம்
ஜனநாயகத்தின் முக்கிய அம்சத்தில் இந்த தனி மனித ரகசியம் என்பது மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று
நாகரிகமான ஒரு சமுதாயத்தில் இப்படி ஒரு அம்சம், அங்கீகாரம் இருந்தால்தான் மக்களாட்சியின் மாண்பும், தனிமனித ரகசியமும் காப்பாற்றப்படும். குடியரசுத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈறாக, பதவிப்பிரமாணம் செய்யும்போது, ரகசிய காப்புப் பிரமாண உறுதியும் எடுத்துக் கொள்வதை அரசியல் சட்டம் கட்டாயமாக்கியுள்ளது - எதைக் காட்டுகிறது?
அது ஒட்டுமொத்த பொது நிகழ்வாக தனி மனித ரகசியமும், தனிப்பட்ட குடிமகனின் உரிமை பறிப்பும் ஏற்படாமல் தடுப்பதாகும்!
கைப்பேசி, இன்றைய நவீன தொலைப்பேசி முறை எல்லாம் வந்தவுடன் பெரும்பாலான நமது தனி உரிமை ரகசியமே தகர்க்கப்பட்ட நிலையில், கொஞ்சநஞ்சம் உள்ளதையும் பறிக்க ஆதார் அட்டை என்பதை முக்கிய ஏவுகணையாக்கியுள்ள நிலைப்பாடு; மரணமடைந்தால் எரிக்க, புதைக்கக்கூட ஆதார் அட்டை தேவை என்று கூறியுள்ளது இன்றைய பா.ஜ.க. அரசு!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் இதைத் துவக்கிய நிலையில், கடுமையாக நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. தான் எதிர்த்தது; இப்போது அப்படியே தலைகீழ் (ஹி டர்ன்) ஆக தனது நிலைப்பாட்டை ஆக்கிக் கொண்டது விசித்திரம்! வேடிக்கை!!
இந்த முயற்சியினை முளையில் கிள்ளி எறியும் வகையில் 9 நீதிபதிகள் அமர்வின் உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வின் தீர்ப்பு அமைந்தது மகிழ்ச்சியான ஒரு மாக்னா கார்ட்டா சாசனம் ஆகும்! ஏற்கெனவே வந்த மற்ற இது சம்பந்தமான தீர்ப்புகளும் இனி செயலற்றவையே!
உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி தருவது!
அதுபோலவே ராஜீவ் காந்தி கொலை வழக்கில், செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பது போல், ஏதோ ஒரு பேட்டரி செல் வாங்கி வந்து கொடுத்தார் என்று பேரறிவாளனை 26 ஆண்டுகள் சிறைக்கொட்டடியில் வாடி வதக்கிய நிலையில், உடல்நிலை சீர்கேடு அடைந்த தந்தையைப் பார்க்க ஒரு மாதம் பரோலில் விடுவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது!
ஆயுள் கைதிக்கு - நீண்ட நாள் தண்டிக்கப்பட்ட கைதிக்கு பரோலில் செல்ல அனுமதிப்பது என்பது ஒரு அடிப்படை உரிமையேயாகும்.
பேரறிவாளன் - பரோல் வரவேற்கத்தக்கது
அதற்கு இவ்வாறு காலம் கழித்து, வெறும் 30 நாள்கள் பரோல் வழங்கியுள்ளனர். நியாயமாக இவர்களனைவரும் விடுதலை செய்யப்படுவதே இயற்கை நீதியாகும்.
குறிப்பாக, பேரறிவாளன் போன்றவர்களை விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்த, தியாகராசன் என்ற காவல்துறை அதிகாரியே, நான் மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்து கொண்டேன் என்றெல்லாம் வெளிப்படையாக செய்தியாளர்களை அழைத்துக் கூறியுள்ளார்!
உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கினை விசாரித்த நீதிபதிகளுள் ஒருவர் ஜஸ்டிஸ் கே.டி.தாமஸ் அவர்கள் தவறுகள் நடந்துள்ளன என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் மனிதாபிமானத்துடன் மத்திய அரசு இதில் நடந்து கொண்டு, மாநில அரசுக்குத் தாக்கீது தரலாமே! மறைந்த முதல்வர் ஜெயலலிதா இதில் கொஞ்சம் அவசரமான அணுகுமுறையைக் காட்டாமல், செய்வன திருந்தச் செய்திருந்தால், இது எப்போதோ நடந்து முடிந்திருக்க வேண்டிய ஒன்று.
விடுதலை செய்யட்டும்!
என்றாலும் நடந்தவைகள் நடந்தவைகளாகட்டும்; இனி நடப்பவைகள் மனிதாபிமானம், இயற்கை நீதியை யொட்டிய அணுகுமுறையாக அமையவேண்டும். ஆம், மனிதர்களுக்கு ஒரு புதுவாழ்வு - நல் வாழ்வு வாழ வழிவகுக்கட்டும்!
எனவே பரோலை முதல் கட்டமாக - விடுதலை செய்ய - பழிவாங்கும் உணர்வுக்கு இடமின்றி - உயர்ந்த தன்மையில் நடந்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட, பாதிக்கப்பட்ட, அனைவர் சார்பாக நமது வேண்டுகோள்!