Skip to main content

அணை அடைப்பு - விவசாயம் பாதிப்பு : ஊர் திரண்டு கலெக்டரிம் புகார்

Published on 05/12/2017 | Edited on 05/12/2017
அணை அடைப்பு -விவசாயம் பாதிப்பு :
ஊர் திரண்டு கலெக்டரிம் புகார்



நெல்லை மாவட்டத்தின் சிவகிரி வட்டத்திலிருக்கிறது தென்மலை கிராமம். இதற்கும் இதன் அருகில் உள்ள உள்ளாறு, தளவாய்புரம், ராயகிரி, மேலக்கரிசல்குளம், கீழக்கரிசல்குளம், உள்ளிட்ட பனிரெண்டாயிரம் மக்கள் தொகையைக் கொண்ட இந்தப் பகுதி கிராமங்களுக்கு குடி நீர் ஆதாரமாகவும், பத்தாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்குப் பாசன வசதியும் கொடுத்து மக்களின் ஜீவாதாரத்திற்கு உதவியிருக்கிறது சிவகிரியின் அருகேயுள்ள உள்ளாறு முனியப்பாஞ்சான் அணை.

பருவகாலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்கிற மழையினால் பெருக்கெடுத்து நிறைத்து ஒடுகிற அணைதான் முனியப்பாஞ்சான். கடந்த பல வருடங்களுக்கு முன்பாக சிவகிரியைச் சேர்ந்தவர்கள் இந்த அணையின் நீர்ப் போக்கை அடைத்துத் தங்கள் பகுதிக்குத் திருப்ப, அணை நீர் தென்மலைப் பகுதிக்கு வரத் தடைப்பட்டிருக்கிறது. மக்களின் குடி நீர் ஆதாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்பட, விவசாயமும் பாதிப்படைந்திருக்கிறது. இது மக்களின் ஜீவாதாரத்திற்கான பிரச்சினையாக உருவெடுத்த நிலையில், அனைத்து கிராம மக்களின் போராட்டம் தீவிரமாகியிருக்கிறது. கடந்த 02.06.2016 அன்று அப்போதைய நெல்லை கலெக்டர் அணையைத் திறந்து தென்மலை பகுதிக்கான முறையான தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டும் நடக்காமல் போகவே இன்று மேற்படி கிராமங்களின் விவசாய அமைப்பினர் திரண்டு வந்து மக்கள் குறை தீர்ப்பு நாளில் நெல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

அணை நீர் தடுக்கப்பட்டதால் நீரின்றி விவசாயம் போயே போய் விட்டது எத்தனை வருடங்கள் தான் நாங்கள் பொறுத்திருப்பது. அதிகாரிகள் பலருக்கும் மனுக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கலெக்டரிடம் புகார் கொடுத்திருக்கிறோம் தீர்வு கிடைக்கவில்லை என்றால் எங்கள் போராட்டம் தீவிரமடையும் என்கிறார் தென்மலை விவசாய அமைப்பின் தலைவரான காளிமுத்து.

செய்தி : படங்கள் : ப.இராம்குமார்

சார்ந்த செய்திகள்