Skip to main content

ஈரோட்டில் வாட்டி வதைக்கும் வெயில்; மக்கள் கடும் அவதி

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

The scorching heat in Erode; people are suffering

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கோடை வெயிலால் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.  ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் திணறி வருகின்றனர்.

 

குறிப்பாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெயிலின் பதிவு மாவட்டத்தில் 100 டிகிரியை தாண்டி வருகிறது. நேற்று அதிகபட்சமாக 106 டிகிரி மாவட்டத்தில் பதிவாகி இருந்தது. அனல் காற்றுடன் புழுக்கம் நிலவி வருவதால் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். காலை 9 மணி முதல் வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் மக்கள் நடமாட்டத்தை குறைத்துக் கொண்டுள்ளனர். இதனால் முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

 

வீடுகளில் மின்விசிறி இயங்கினாலும் புழுக்கம் காரணமாக அவதி அடைந்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் வெளியே செல்லும் போது வெயில் தாக்கத்துடன் அனல் காற்றும் வீசுவதால் செய்வது தெரியாமல் திகைத்து வருகின்றனர். வெயிலின் தாக்கம், புழுக்கம் காரணமாக குழந்தைகளுக்கு அதிக அளவில் தோல் சம்பந்தமான வியாதிகள் வரத் தொடங்கியுள்ளன. தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளதால் குடும்பம் குடும்பமாக மக்கள் நீர்நிலைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

 

மேலும் இளநீர், கரும்பு பால், நுங்கு மற்றும் குளிர்பானங்களை மக்கள் விரும்பி அருந்தி வருகின்றனர். இதனால் அப்பொருட்களின் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதைப்போல் தர்பூசணி பழ வியாபாரமும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இப்போதே வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் அடுத்த மாதம் தொடங்கும் அக்னி நட்சத்திரம் வெயிலை எண்ணி மக்கள் அச்சமடையத் தொடங்கியுள்ளனர். கார வகையான சாப்பாடுகளை குறைத்துக்கொண்டு நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்