சமீப காலமாக அரசு பள்ளிகளில் சில மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டுவது, சக மாணவர்களை தாக்குவது, போதை பொருட்களை பள்ளியிலேயே பயன்படுத்துவது என பல்வேறு வீடியோ காட்சிகள் வெளியாகி தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்திவரும் நிலையில் கடந்த 30 ஆம் தேதி மதுரையில் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் குழுவாக மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மதுரையின் பிரதான பேருந்துநிலையமாக இருக்கக்கூடிய பெரியார் பேருந்து நிலையத்தில் கடந்த 30 ஆம் மாலை அரசு பள்ளி மாணவிகள் 10க்கும் மேற்பட்டோர் குழுவாகப் பிரிந்து மாறிமாறி கூச்சலிட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் பேருந்து நிலையத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கியதோடு அங்கு இருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் மாணவிகள் பொது இடத்தில் மோதிக்கொண்டது தொடர்பாக அவர்களுக்கு ஆலோசனை வழங்க மாநகராட்சி கல்வி அலுவலர் ஆதி ராமசுப்பு, மாவட்ட கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமையிலான குழு சென்றது. விசாரணையில் முன்விரோதம் காரணமாக மாணவிகள் மோதிக்கொண்டது தெரியவந்தது. மோதலில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோர்களை விசாரித்த குழுவினர் இதுபோன்ற ஒழுங்கீன செயலில் மீண்டும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததோடு, தேர்வு வரும் 5 ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதுவரை சம்பந்தப்பட்ட மாணவிகள் பள்ளிக்கு வரவேண்டாம் எனவும், தேர்வுக்கு சம்பந்தப்பட்ட மாணவிகள் பெற்றோருடன் தான் வந்து தேர்வெழுதிவிட்டுச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.