நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும், பள்ளிக் கல்வித்துறையின் புதிய முயற்சி எனவும், வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் தகவல் பகிரப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம், சோழசிராமணி, கதவணை சோதனைச் சாவடியில் மாஸ்க் அணிந்த நிலையில் மாணவர்கள் இருவரும், மாணவிகள் இருவரும், வாகனங்களில் வரும் பொது மக்களை மறித்து ‘அறிவுறுத்தும்’ பணியில் ஈடுபட்டிருந்ததை அந்தப் புகைப்படங்கள் வெளிப்படுத்தினA.
தமிழகத்தில் கரோனா பரவலானது சமூகத்தொற்றை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோர் பாதிப்புக்கு ஆளாகிவரும்போது, இத்தனை ‘ரிஸ்க்’ ஆன பணியில் பள்ளி மாணவர்களையும் ஈடுபடுத்த வேண்டுமா? என்ற கேள்வி பெற்றோர் தரப்பில் எழுப்பப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணனை தொடர்புகொண்டு பேசினோம்.
“பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடு என்பதே இப்போதைக்கு எதுவும் இல்லை. இந்தப் பணிகளில் எங்களால் எப்படி மாணவர்களை ஈடுபடுத்த முடியும்? ஆசிரியர்கள் 100 பேர் மட்டும்தான் கரோனா பரவல் தடுப்பு பணிக்காகச் சென்றிருக்கிறார்கள்.” என்று முடித்துக்கொண்டார்.
“சாலையில் மாணவிகள் நிற்பதற்குப் பின்னால், ‘நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் காவல்துறை’ என்ற பேரிகார்டு உள்ளது. கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருப்பது மாணவர்கள் போலவே தெரிகிறது. ஆனால், அம்மாணவர்கள் சாரணர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்..” என்றார், ஆசிரியர் ஒருவர்.
மேலும் அவர், “பள்ளிப்பருவத்தில் சாரணர் இயக்கத்தில் சேர்ந்து நற்பண்புகளையும், நம்பிக்கையையும், நாட்டுப்பற்றையும் மாணவர்களால் வளர்த்துக்கொள்ள முடியும். ராணுவப் பயிற்சியையும் அளிக்கக்கூடிய தன்னார்வ அமைப்பு இது. மனிதநேயப் பண்புகளுடன் கூடிய சேவைகள் மூலம் சமூகத்துடன் ஒன்றிணைந்து செயல்படக்கூடியவர்கள் சாரணர்கள்.
தர்மபுரி மாவட்டத்தில், கரோன தடுப்பு பணியில் சாரணர் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சாரணர், சாரணியர் இயக்கம் சார்பில், அங்கு மக்கள் அதிகமாக கூடும் ரேசன் கடைகளுக்குச் சென்று, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அறிவிப்புகளை ஒட்டி வருகின்றனர். அங்கு வரும் மக்களுக்குத் துண்டு பிரசுரங்கள் வழங்கி, கை கழுவுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவற்றை எடுத்துக் கூறுகின்றனர்.
இதெல்லாம் சரிதான்! ‘போதை.. போதை.. அது சாவின் பாதை.. போதையைத் தொடாது சாதனை படைப்போம்..’ என, போதை விழிப்புணர்வு பேரணிகூட, பள்ளி மாணவர்களான சாரணர், சாரணியர் பல ஊர்களில் நடத்தி வருகிறார்கள். ‘எதற்கும் தயார்’ என்ற உறுதியோடு இருப்பவர்கள் என்றாலும், கரோனா நோய்த்தொற்று போன்ற அபாயகரமான சூழ்நிலையில், மாணவர்களை இச்சேவையில் ஈடுபடுத்தத்தான் வேண்டுமா? எனக் கேள்வி எழுவது நியாயமானதுதான்..” என்றார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை, கரோனா தடுப்பு சேவையில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் விஷயத்தில் கவனத்துடன் செயல்பட்டு, விமர்சனங்கள் எழாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.