Skip to main content

திருவள்ளூர் அருகே காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் உயிரிழப்பு!

Published on 09/08/2017 | Edited on 09/08/2017
திருவள்ளூர் அருகே காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் உயிரிழப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டு காய்ச்சலுக்கு திருவள்ளூர் திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் மட்டும் 15க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். பலர் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இந்நிலையில் இந்த ஆண்டு பருவ நிலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றத்தால், பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி இருப்பதாலும், கழிவுநீர் மழை நீர் சாலைகளில் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி மாவட்டம் முழுவதும் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகின்றது. காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட பலர் திருவள்ளுர், திருத்தணி, பொன்னேரி, கும்முடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பொதட்டூர் பேட்டை அருகே உள்ள காவேரிராஜிபேட்டை கிராமத்தை சேர்ந்த வியாபாரி தங்கம் என்பவரின் மகன் மோகன் (10) அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த  சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் காய்ச்சல் குறையாத நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மற்ற இரு மகன்கள் கார்த்திக், ஜீவா ஆகியோரும் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குழந்தை இறந்த சம்பவம்  பொதுமக்கள் மத்தியில்  பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

- இரா.தேவேந்திரன்.

சார்ந்த செய்திகள்