அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் அரசுப் பேருந்தைச் சிறை பிடித்த சம்பவம் திருப்பத்தூரில் நிகழ்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ளது அலசந்தாபுரம் ஊராட்சி. இக்கிராமத்தில் ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியின் சுற்றுச்சுவர் சேதம் அடைந்து காணப்படுவதுடன், வகுப்பறை கட்டிடங்களும் சிதிலமடைந்து கிடக்கிறது. இதனால் அடிப்படை வசதிகள் இல்லாமல் பள்ளி மாணவர்கள் அவதியுற்று வருவதாகவும், பாம்பு, பூச்சிகள் போன்றவை பள்ளி வளாகத்திற்குள் வருவதால் ஆபத்தான இடம் போல் பள்ளி செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்ததோடு, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஆந்திராவிலிருந்து வாணியம்பாடி செல்லக்கூடிய சாலையில் இன்று காலை திடீரென மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியில் வந்த அரசுப் பேருந்து ஒன்றைச் சிறை பிடித்த கிராம மக்கள் பள்ளிக் கட்டிடத்தை உடனடியாக கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.