தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தாக்கலாகும் இ-பட்ஜெட்டை, கணினித் திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாசிக்கத் துவங்கினார். ஆனால் சில நொடிகளிலேயே அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து நிதியமைச்சர் உரையில், ''6 மாதங்களுக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பொருந்தும். அரசின் நிதிநிலையைச் சீர்படுத்துவோம் என மக்களுக்கு நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம். ஒரே ஆண்டில் முடிக்க இயலாத அளவுக்குப் பணி மிகக்கடுமையாக உள்ளது. நிதிச் சிக்கலை சீர் செய்ய 2, 3 ஆண்டுகள் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும். மாநில அரசின் நிதியைத் திசைதிருப்பும் வகையில் ஒன்றிய அரசின் வரிமுறை இருக்கிறது.2.05 லட்சம் ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது, தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுநிலங்களை முறையாகப் பயன்படுத்த 'அரசு நில மேலாண்மை அமைப்பு' உருவாக்கப்படும். எந்த விதமான பேரிடரையும் சந்திக்கும் நிலையில் மாநிலம் உள்ளதை உறுதி செய்வோம். தமிழ் வளர்ச்சித்துறைக்கு 88.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறைக்கு 29.43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீழடி, சிவகளை, கொடுமணல் ஆகியவை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்.
தமிழகக் காவல்துறைக்கு 8,930.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் 14,137 பணியிடங்கள் உருவாக்கப்படும். தீயணைப்புத் துறைக்கு 405.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுதுள்ள 1985ஆம் ஆண்டு, 'தீயணைப்புச் சேவைகள்' சட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும். சாலை பாதுகாப்பிற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதியதாக 6 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க 6.25 கோடி ரூபாய் செலவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். 150 கோடியில் காசிமேடு துறைமுகம் மேம்படுத்தப்படும். நீதித்துறை நிர்வாகத்திற்காக 1,713.30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து நீதிமன்றங்களுக்கும் புதிய கட்டிடங்கள் இருப்பது உறுதி செய்யப்படும். உணவு மானியத்திற்கு 8,437.57 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது தமிழகம் போன்ற மாநிலங்களுக்குப் பெரும் சவால். எனவே 500 கோடியில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும். 200 குளங்களின் தரத்தை உயர்த்த 111.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கிராமப்புற ஏழைகளுக்கு 2021-2022 ஆம் ஆண்டில் 8,017,41 கோடி ரூபாய் செலவில் 2,89,877 கான்க்ரீட் வீடுகள் கட்டப்படும். 1.27கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை செய்யப்படும். 'நமக்கு நமே' திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், வணிக வளாகம் கட்டி முடிக்கப்படும். 'கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு' திட்டத்திற்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மூன்று இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும். கணேசபுரம், கொன்னூர் நெடுஞ்சாலை-ஸ்ட்ரான்ஸ் சாலை, தெற்கு உஸ்மான் சாலையில் 335 கோடி ரூபாயில் மேம்பாலங்கள் கட்டப்படும். புதிய அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுயஉதவி குழுக்களுக்கு 20 ஆயிரம் கோடி கடன் உதவி உறுதிசெய்யப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு 2,350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் வடிகாலுக்கு 87 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள மண் சாலைகள் தரமுயர்த்தப்படும். நகரங்களில் 30 மீட்டர் இடைவெளியில் ஆற்றல் மிக்க தெரு மின்விளக்கு அமைக்கப்படும். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு 3,954,44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தில் கோடம்பாக்கம்-பூந்தமல்லி இடையேயான சேவை 4 ஆண்டுகளுக்குள் துவங்கும். தமிழ்நாட்டை மின்மிகை மாநிலம் எனக் கூறுவது தவறானது. தமிழகம் மின்மிகை மாநிலம் இல்லை. 2,500 மெகாவாட் மின்சாரத்தைச் சந்தையில் கொள்முதல் செய்தே தமிழ்நாடு அரசு சமாளிக்கிறது. மின்வாரியத்தின் கழக நிறுவனங்கள் நொடிந்து போவதில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண் இலவச மின்சாரம், வீட்டு மின்சார மானியத்திற்காக 19,872.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் இலவச பஸ் பயணத்திற்கு மானியமாக 703 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் 623.59 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு 3 கோடி நிதி வழங்கப்படும். சீர்மிகு நகரங்கள் திட்டத்திற்கு 2,350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சத்திற்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். பள்ளிக்கல்வித்துறைக்கு 32,599.54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 கோடி ரூபாய் செலவில் 25 கலை, அறிவியல் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். குடிநீர் இணைப்பு, பசுமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டம் துவங்கப்படும்.
உயர்கல்வித்துறைக்கு 5,369.09 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் 165 கோடி ரூபாய் மதிப்பில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும். மணப்பாறை, தேனி, திண்டுக்கல்லில் உணவுப் பூங்கா அமைக்கப்படும். திருவள்ளூர் மாவட்டம் மாநல்லூரில் மின்வாகனப் பூங்காவும், காஞ்சிபுரம் ஒரகடத்தில் மருத்துவச் சாதனங்கள் பூங்காவும் அமைக்கப்படும். ரணிப்பேட்டையில் தோல்பொருட்கள் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படும். திருவண்ணாமலை, நாகை, நெல்லை, விருதுநகர், நாமக்கல், தேனி, சிவகங்கை, விழுப்புரத்தில் புதிய சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் 10 கோடி ரூபாய் செலவில் புவியியல் புதைபடிவப் பூங்கா அமைக்கப்படும். இலவச வேட்டி, சேலை வழங்க 490 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலவசப் பள்ளிச் சீருடைகள் விநியோகத் திட்டத்திற்கு 409.30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட கல்குவாரிகள் முறையாக மூடப்பட்டு பாதுகாக்கப்படும். தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகம் அமைக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். பழனி முருகன் கோவில் மூலம் புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும். துணிநூல் துறைக்கென தனி இயக்குநரகம் உருவாக்கப்படும்.
அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 187.91 ஏக்கர் நிலங்கள் 100 நாட்களுக்குள் மீட்கப்பட்டுள்ளது. பாரத் நெட் திட்டத்தில் கிராமங்களுக்கு இன்டர்நெட் வசதி செய்துதரப்படும். சுற்றுலாத்துறைக்கு 187.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருநங்கையர் ஓய்வூதியத் திட்டத்திற்கு 1.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் மதிய உணவுத் திட்டத்திற்கு 1,725.41 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிடர், பழங்குடியினர் சிறப்புக் கூறுகள் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடுக்கு 14,696.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் புதியதாக 10 கலை அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும். கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் ஆகிய வசதிகளை மேம்படுத்த 123.02 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்காக 225.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் 3 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறைக்கு ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு 17,890.17 கோடியாக உள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் மிக முக்கியானது. தகுதியான குடும்பங்களை கண்டறிந்த பிறகே இல்லத்தரசிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும். குடும்பத்தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்படும் என்பது தவறான புரிதல். எனவே ரேஷன் அட்டைகளில் குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை.
பெட்ரோல் மீதான வரிக்குறைப்பு காரணமாக லிட்டருக்கு 3 ரூபாய் முதல்வர் ஆணையிட்டுள்ளார். பெட்ரோல் மீதான வரிக்குறைப்பு காரணமாக ஆண்டுக்கு 1,160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட 2,756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும். நடப்பு நிதியாண்டின் ஒட்டுமொத்த வருவாய் செலவினம் 2,61,188.57 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டின் மொத்த வருவாய் 2,60,409.26 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டின் வருவாய்ப் பற்றாக்குறை 58,692.58 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது'' எனக் கூறினார்.