Skip to main content

புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் பயனளிக்கும் திட்டம்; தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

A scheme to benefit migrated workers; Tamil Nadu Budget Announcement

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் தாக்கல் செய்கிறார். 

 

2023 -2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் வகையில் நிதியமைச்சர் முன் வரிசையில் நின்று படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிதியமைச்சர் தனது உரையை துவங்கும் போதே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். எனினும் நிதியமைச்சர் தொடர்ந்து பட்ஜெட்டை வாசித்தார். 

 

இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு குறித்து வாசிக்கும் பொழுது, “அரசின் முன்னோடித் திட்டமான "மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தில், தொற்றா நோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. தொழிலாளர்கள் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்க ஒரு சிறப்பு முயற்சி தொடங்கப்பட உள்ளது. இதன்படி, முதற்கட்டமாக 711 தொழிற்சாலைகளிலுள்ள 8.35 இலட்சம் தொழிலாளர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விரிவுபடுத்தப்படும். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இத்திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களும் பயனடைவார்கள்.

 

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் குடும்பம் ஒன்றிற்கு ஆண்டுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 11.82 இலட்சம் நோயாளிகளுக்கு 993 கோடி ரூபாய் மதிப்பிலான உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

 

கிண்டி கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் 1000 படுக்கைகள் வசதி கொண்ட 'கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை' இந்த ஆண்டு திறந்து வைக்கப்படும். 1,020 கோடி ரூபாய் செலவில் மதுரை, கோயம்புத்தூர், கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களிலுள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி வளாகங்களில் கட்டப்பட்டு வரும் புதிய உயர் மருத்துவக் கட்டடங்களும் விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

 

திருச்சிராப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் உயர் மருத்துவ சிகிச்சை தேவைகளை நிறைவு செய்து வரும் மகாத்மா காந்தி நினைவு அரசினர் மருத்துவமனையில் 110 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும். வடசென்னை பகுதி மக்களின் மருத்துவத் தேவையை நிறைவு செய்யும் வகையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பன்னோக்கு மருத்துவப் பிரிவும், செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் விடுதிக்கு புதிய கட்டடங்களும் 147 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

 

மாநிலத்தின் முதல் அரசு சித்த மருத்துவக் கல்லூரி பாளையங்கோட்டையில் 1964 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இக்கல்லூரியில் தற்போது 100 இளங்கலை பட்டதாரிகளும், 60 முதுகலை பட்டதாரிகளும் நாள்தோறும் பயின்று வருகின்றனர். ஏறத்தாழ 1,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் 40 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். வரவு-செலவுத் திட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 18,661 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்