புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் ஊராட்சி, போரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி சத்தியா. தந்தை இல்லாத நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட தாயை வைத்துக்கொண்டு 10 அடி நீளம் 7 அடி அகலம் கொண்ட மண்குடிசையில் வாழ்ந்துவருகிறார். தனக்கும் தன் தாயாருக்குமான தேவைகளைப் பூர்த்தி செய்ய, வீட்டுவேலை தொடங்கி விடுமுறை நாட்களில் விவசாயக் கூலி வேலைவரை சென்றுவருகிறார்.
மழை காலங்களில், வீட்டில் படுக்கவசதி இருக்காது. இதனால், தன் தாயோடு பக்கத்து வீட்டில் உறங்கி, பகலில் தோட்டவேலை செய்வார். இதனாலையே +2 வில் மதிப்பெண் குறைந்தது. எனினும், மேலும் படித்து, அரசு வேலைக்கு போகவேண்டும் எனக் கனவோடு இருந்து வருகிறார். அதற்கு முன்னால் "கதவு வச்ச ஒரு சின்ன வீடு வேணும்" என்ற அவரது ஆசையை 'மக்கள் பாதை' மூலம் அறிந்து, மாணவி சத்தியாவை சந்தித்து அவரது கோரிக்கைகளையும் வறுமையையும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கவணத்திற்குக் கொண்டு சென்றோம். அனைத்து உதவிகளும் கிடைக்க நடடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிஅளித்தார் ஆட்சியர். இவைகளை நக்கீரன் இணையத்தில் செயனதியாகவும் வீடியோவாகவும் செப்டம்பர் 3 ஆம் தேதி வெளிக்கொண்டு வந்தோம்.
செய்தி வெளியான சில மணி நேரத்தில் உதவி செய்ய நக்கீரன் வாசகர்கள் முன்வந்தனர். அடுத்த நாள் மாவட்ட ஆட்சியர் உத்தரவில் வருவாய்த துறையினர் சத்தியா குடியிருக்கும் மண்குடிசைக்குச் சென்று ஆய்வு செய்து, மாற்று இடத்தில் குடிமனைப்பட்டாவுக்கான இடம் தேர்வு செய்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் உதவிகள் செய்தார். நக்கீரன் வீடியோவைப் பார்த்தபிறகு, அலுவலகத்தில் இருக்க முடியாமல் மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் நேரில் சென்று மாணவிக்கு தைரியம் சொன்னதோடு சில உதவிகளும் செய்து தொடர்ந்து கல்லூரி படிப்பிற்கும் போட்டித் தேர்வுக்கும் படிக்க உறுதிஅளித்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவில் மாவட்ட மனநல திட்ட அலுவலர் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் மாணவிக்கு ஆலோசனைகள் வழங்கியதோடு அவரது தாயாருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அழைத்துவந்து தங்கவைத்து சிகிச்சை அளித்து வருகிறார். இந்த நிலையில் சத்தியாவை தனது அலுவலகத்திற்கு அழைத்த மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வீட்டுமனைப்பட்டா வழங்கியதோடு 'உனக்காக நாங்கள் இருக்கிறோம்' என்று ஆறுதல்கூறி மேற்படிப்பிற்கு, மகளிர் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டு விடுதியும் ஒதுக்கப்படுவதாகக் உறுதிகூறினார். கண்கலங்க நன்றிகூறி பட்டாவை பெற்றுக் கொண்டார் சிறுமி சத்தியா.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூறும் போது, “மாணவி சத்தியா குறித்த தகவல் வந்ததும் அதிகாரிகள் ஆய்வுசெய்து நடவடக்கை எடுத்ததன் பேரில், இன்று பட்டா வழங்கப்பட்டது. வீடு கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். மாணவி சத்தியா கூறும் போது, “மக்கள் பாதை மூலம் தகவல் அறிந்து நக்கீரன் என் குடும்ப சூழ்நிலையை வெளிக்கொண்டு வந்தது. அதன்பிறகு எனக்காக வீட்டுமனைப்பட்டா, வீடு, மேற்படிப்பிற்கு இடம், விடுதி, அம்மாவுக்கு சிகிச்சை கிடைத்தது. மேலும், நக்கீரன் செய்தி பார்த்து ஏராளமானவர்கள் என்னிடம் ஆறுதலாகப் பேசி உதவிகளும் செய்து வருகிறார்கள். அனைவருக்கும் நன்றி சொல்வதோடு நான் விரும்பிய அரசு அதிகாரியாக வருவதே அனைவரின் விருப்பமாக உள்ளது. அதை நிறைவேற்றுவேன்” என்றார்.
நக்கீரன் சாரிபிலும் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், அரசு அலுவலர்கள், மற்றும் உதவிகள் செய்துவரும் அனைவருக்கும் நன்றிகள்!