“நான் அவன் இல்லைங்க... எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல” என சசிகலாவின் சகோதரி மகன் வெளியிட்ட வீடியோ காட்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா என்ற பெயர் தமிழக அரசியலில் பல ஆண்டு காலமாகவே பேசப்பட்டு வருகிறது. முதலில் ஜெயலலிதாவின் நிழலாக வலம் வந்த சசிகலா., அவரது மறைவிற்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைக்குச் சென்று நான்கு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த சசிகலா., அவரது ஆதரவாளர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். ஆனால், அடுத்தடுத்து நடந்த அதிமுக உட்கட்சி பூசல்கள் சசிகலாவிற்கு பெரும் பின்னடைவாக மாறியது.
இந்நிலையில், சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் என்பவருக்கும் ஃபர்னிச்சர் தொழில் செய்துவரும் பாஸ்கர் என்பவரின் மகளுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, பாஸ்கரின் ஃபர்னிச்சர் கடையில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஆந்திர போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், ஆந்திர போலீஸ் தலைமையில் பாஸ்கரின் ஃபர்னிச்சர் கடையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பாஸ்கரனின் கடையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, பாஸ்கரை மத்திய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். ஆரம்பத்தில் சிறிய கடத்தல்களில் ஈடுபட்டு வந்த பாஸ்கர் அதன்பிறகு செம்மரக் கட்டைகளைக் கடத்தி வரத் தொடங்கியுள்ளார். மேலும், இந்த செம்மரக் கடத்தலை ரகசியமாக செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் இந்த ஃபர்னிச்சர் கடையை நடத்தி வந்திருக்கிறார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கரன் புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "இன்னைக்கு காலைல ஒரு செய்திய கேள்விப்பட்டேன். செம்மரக் கட்டை வழக்குல சசிகலாவின் உறவினர் கைது செய்யப்பட்டார்னு என்னோட போட்டோவ போட்டு இருந்தாங்க. அந்த பாஸ்கர் நா இல்ல. அது வேற பாஸ்கர். எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்ல" எனப் பேசியிருந்தார். தற்போது, ‘நான் அவர் இல்லை’ எனக்கூறும் பாஸ்கரின் வீடியோ காட்சி மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
- சிவாஜி