செம்மரக்கட்டை கடத்தலில் சசிகலாவின் உறவினர் கட்டை பாஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சசிகலாவின் அண்ணன் மகன் விவேக். இவருக்கும் ஃபர்னிச்சர் தொழில் செய்து வரும் பாஸ்கர் என்பவரின் மகள் கீர்த்தனாவிற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இத்திருமணத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், பாஸ்கரின் ஃபர்னிச்சர் கடையில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வருவாய் புலனாய்வுத் துறையினர் பாஸ்கரின் ஃபர்னிச்சர் கடையில் சோதனை நடத்தினர். இச்சோதனையில் 48 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாஸ்கரை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். ஆரம்பத்தில் சிறிய கடத்தல்களில் ஈடுபட்டு வந்த பாஸ்கர் பின் செம்மரக் கட்டைகளைக் கடத்தி வந்தார். இதற்காகவே ஃபர்னிச்சர் கடையையும் நடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில், கடத்தல் வழக்கில் மத்தியப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார்.