Skip to main content

சனாதன விவகாரம்; பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

Sanatana Affair Case registered against BJP executive 

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.

 

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்ட பாஜகவின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா மீது திமுக வழக்கறிஞர் அணியினர் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அயோத்தி சாமியார் பரமஹம்ஸ ஆச்சாரியா மீது மதுரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக வழக்கறிஞர் அணி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் சாமியார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், பொது அமைதியை சீர் குலைத்தல், வகுப்புகள் இடையே பகை வளர்த்தல் உள்ளிட்ட 5  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சாமியார் பேசிய வீடியோவை வெளியீட்டு அவதூறு கருத்துகளைப் பரப்பிய பியாஸ் ராய் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்