புதுக்கோடை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மனிதர்கள் புழங்கும் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அனைத்து மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் வேங்கைவயல் கிராமத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அக்கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் அனைத்து சமூக மக்களும் கலந்துகொண்டனர். இதன் பின்னர் அமைச்சர்கள் மக்கள் முன் பேசினர். அப்போது பேசிய அவர்கள், “குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்து தலைகுனிவை ஏற்படுத்திய குற்றவாளிகள் முறையாக விசாரணை செய்து கண்டுபிடிக்கப்பட்டு கட்டாயம் கைது செய்யப்படுவர். யாரையும் தப்பிக்க விடமாட்டோம். நிச்சயமாக அரசு முறையான நடவடிக்கைகளை அதில் எடுக்கும்” எனக் கூறினர்.