கிருஷ்ணகிரி அருகே நடந்த ஆணவக்கொலை சம்பவத்தில் பலத்த காயங்களுடன் உயிர்த் தப்பிய இளம்பெண்ணின் துண்டான மணிக்கட்டு பகுதியை, சேலம் அரசு மருத்துவர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை மூலம் மீண்டும் இணைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதியைச் சேர்ந்தவர் தண்டபாணி (50). இவருடைய மகன் சுபாஷ் (25). இவர் அனுசுயா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் தண்டபாணி, மகன் மீது கடும் ஆத்திரம் அடைந்தார். இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, பாட்டி கண்ணம்மாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சுபாஷை, மகன் என்றும் பாராமல் தண்டபாணி அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.
இதைத் தடுக்க முயன்ற கண்ணம்மாளையும், அனுசுயாவையும் சரமாரியாக வெட்டினார். இந்த சம்பவத்தில் கண்ணம்மாள் நிகழ்விடத்திலேயே பலியானார். அனுசுயா மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். அனுசுயா தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒரு கையில் மூன்று விரல்களும் மற்றொரு கையில் மணிக்கட்டும் துண்டாகித் தொங்கிக் கொண்டிருந்த நிலையில், அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த இரு நாள்களுக்கு முன்பு, மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து 6 மணி நேரம் அனுசுயாவுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து, மணிக்கட்டு பகுதியை இணைத்தனர். உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவித்துள்ள நிலையில், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு காவல்துறை ஆய்வாளர் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.