சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தைச் சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் குமார் (32). இவர் அந்தப் பகுதியில் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார். புதன்கிழமை (ஏப்ரல் 24) இரவு, அவருடைய கடையில் மீதமான கோழிக்கறியில் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து, வீடு அருகே தெருக்களில் சுற்றித்திரியும் நாய், பன்றிகளுக்கு வைத்துள்ளார்.
இதைத் தின்ற பன்றி, நாய், பூனை, கோழி, காகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வாயில்லா ஜீவராசிகள் பலியாயின. இவை தெருக்களில் ஆங்காங்கே செத்துக் கிடப்பதைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் வாழப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் குமாரை கைது செய்தனர். தெருக்களில் பன்றி, நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாலும், அவற்றால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாலும் அவற்றை விஷம் வைத்துக் கொன்றதாக குமார் தெரிவித்துள்ளார்.
விஷம் வைத்து விலங்குகளைக் கொன்றதால், புளூ கிராஸ் எனப்படும் பிராணிகள் நல அமைப்பினரும் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சிங்கிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலும் மர்ம நபர்கள் விஷம் கலந்துள்ளதாக ஒரு தகவல் பரவியது. இதனால் சிங்கிபுரம் கிராமமே வியாழக்கிழமை (ஏப். 25) முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. அதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.