சேலம், திருச்சி மத்திய சிறை எஸ்.பி.க்கள் குறுகிய காலத்திற்குள் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மத்திய சிறை எஸ்.பி. ஆக பணியாற்றிவந்தவர் செந்தில்குமார். இவர், திடீரென்று திருச்சி மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிவந்த எஸ்.பி. ஊர்மிளா, கோவை மத்திய சிறைக்கும், புதுக்கோட்டை மத்திய சிறை எஸ்.பி. ஆண்டாள், சேலம் மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை மத்திய சிறை எஸ்.பி. ஆக இருந்த செந்தாமரைக்கண்ணன் பதவி உயர்வுபெற்று வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஆகவும், அங்கு பணியாற்றிவரும் ஜெயபாரதி திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆகவும், திருச்சியில் பணியாற்றிவந்த டி.ஐ.ஜி. கனகராஜ், சென்னை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஆகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்களில், கடந்த ஜூன் மாதம் புழல் சிறை எஸ்.பி. ஆக இருந்த செந்தில்குமார் சேலம் மத்திய சிறைக்கும், மதுரையில் பணியாற்றிவந்த ஊர்மிளா திருச்சி மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டனர். ஐந்து மாதத்திற்குள் இவர்கள் இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்டவர்கள், புதிய இடங்களில் உடனடியாக பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.