Skip to main content

சேலத்தில் மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க அனுமதி! கரோனா தொற்று அதிகரித்ததால் நடவடிக்கை!! 

Published on 23/06/2020 | Edited on 23/06/2020
shops

 

சேலம் மாவட்டத்தில் மீண்டும் கரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்ததால், அனைத்து வகையான கடைகளும் ஜூன் 24 முதல் மாலை 4 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் ராமன் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த்தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இ-பாஸ் அனுமதியின்றி வருகை தந்தவர்கள், தகவல் தெரிவிக்காமலும், எவ்வித பரிசோதனைகளும் செய்து கொள்ளாமல் இருந்ததால் அவர்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 

சேலம் மாவட்டத்தில் 35 பேர் மட்டுமே ஆரம்பத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது 185 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வெளி மாநில பயணிகள் 150 பேருக்கும், வெளி மாவட்ட பயணிகள் 181 பேருக்கும் என ஜூன் 22ம் தேதி நிலவரப்படி, மொத்தம் 516 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 

வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சேலத்திற்கு வருவோர், அதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் தாமாக முன்வந்து, அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 

இந்நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மக்கள் அதிகம் கூடுவதைத் தடுக்க, சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வியாபாரிகள் சங்கத்தினர் தாமாக முன்வந்து தினமும் மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் எனவும், அதன் பிறகு அனைத்து வகை கடைகளும் அடைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 

இம்மாவட்டத்தில் உள்ள செவ்வாய்ப்பேட்டை நெல் அரிசி உணவு தானிய வணிகர்கள் சங்கம் முதல் ஜவுளி ஏற்றுமதியாளர்கள், ஆபரண விற்பனையாளர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் நேரக்கட்டுப்பாடு முடிவுக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளனர். 

இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான கடைகள், வணிக நிறுவனங்கள் நாளை (ஜூன் 24) முதல் மாலை 4 மணி வரை மட்டுமே செயல்படும். மொத்த வியாபார கடைகள் உள்ள செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட், லீ பஜார் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இவற்றில் அடங்கும். 

அதேநேரம் மருந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ள கடைகள், நிறுவனங்கள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவற்றுக்கு மேற்சொன்ன உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

பேக்கரிகள், உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. உணவுப்பொருள்களை பார்சல் வழங்கிட மட்டும் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. தேநீர் கடைகள் திறக்க அனுமதி இல்லை. 

சேலம் மாவட்டம் முழுவதும் அனைத்து வார சந்தைகள், மறு உத்தரவு வரும் வரை திறக்க அனுமதி இல்லை. உழவர் சந்தைகள் வழக்கம்போல் இயங்கும். 

மேற்குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் எதுவும் அனைத்து சிறு, குறு, நடுத்தர, பெருந்தொழில் நிறுவனங்களுக்குப் பொருந்தாது. அவை அனைத்தும் வழக்கம்போல் இயங்கும். 

பேருந்துகளில் பயணம் செய்வோர், ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பயணத்தின்போதும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். 

சேலம் மாவட்டத்தில், மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் எந்த ஒரு மருந்துக் கடைகளிலும் மருந்து, மாத்திரைகளை யாருக்கும் கொடுக்கக்கூடாது. அவ்வாறு வழங்கப்படுவது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிமமும் ரத்து செய்யப்படும். 

கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதாக போலி மருத்துவர்கள் யாராவது கூறினால், அதைப்பற்றி உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். போலி மருத்துவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆகவே, சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும், நேரக் கட்டுப்பாடுகளுக்கும் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 

 

சார்ந்த செய்திகள்