புதுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ‘தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை-2019’ என்ற தலைப்பில் சனிக்கிழமை கருத்தரங்கை நடத்தியது. இதில், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் முத்துநிலவன் கலந்து கொண்டு பேசும் போது..
’’பள்ளியில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்றோ? குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் தோல்வி அடைந்துவிட்டனர் என்றோ சொல்லிவிட முடியாது. பல நேரங்களில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் நடத்தும் நிறுவனங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் சம்பளத்திற்கு வேலைசெய்யும் நிலை உள்ளது. மெக்காலே கல்வி முறை வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான நம்பிக்கையைத் தரவில்லை.

இந்நிலையில், மெக்காலே கல்வியைவிட பல மடங்கு மோசமான கல்விமுறையை தேசிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை முன்வைக்கிறது. மூன்றாம் வகுப்பில் இருந்து பொதுத்தேர்வு தொடங்குவது பெரிய அபத்தம். இப்படி பொதுத் தேர்வுகளை நடத்துவதன் மூலம் ஏழை மாணவர்கள் மற்றும் பெண்கள் பெருமளவிற்கு மேல்படிப்புக்குச் செல்ல முடியாமல் இடைநிற்றல் ஏப்படும். தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த நூறு பேரில் 75 பேர் மட்டுமே பத்தாம் வகுப்பைத் தாண்டுகின்றனர். இந்த சாராசரி உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் 20 என்ற அளவில் மிக, மிக குறைவாகவே உள்ளது.
இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழகம் கல்வியில் பெரிய அளவுக்கு முன்னேறி இருக்கிறது. மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றும் வடமாநிலங்கள் தாழ்ந்து கிடக்கிறது. உ.பி போன்ற வடமாநிலங்களில் இந்தி மட்டுமே தாய்மொழி அல்ல. போகி, மைதிலி போன்ற மொழிகளைப் பேசும் மக்கள் பல லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்கள் வீட்டில் தாய் மொழியையும் பள்ளியில் வேற்று மொழியையும் கற்பதால் கற்கும் திறன் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
வட மாநிலங்களைப் போல தமிழகத்தையும் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக ஆக்கும் சூழ்ச்சியும், சஸ்கிருத்ததை திணித்து இந்துத்துவக் கொள்கையை அமுல்படுத்தும் மோசமான நடவடிக்கையும் தேசிய கல்விக்கொள்கையில் அடங்கி இருக்கிறது’’ என்றார்.
கருத்தரங்கிற்கு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் அ.மணவாளன் தலைமை வகித்தார். தமுஎகச மாவட்டச் செயலாளர் சு.மதியழகன் வரவேற்றார். தமுஎகச மாவட்டத் தலைவர் எம்.ஸ்டாலின் சரவணன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரெங்கசாமி, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், அரசு பள்ளிப் பாதுகாப்பு இயக்கம் புதுகை செல்வா, ஆசிரியர் அமைப்புகளின் நிர்வாகிகள் த.ஜீவன்ராஜ், த.ராஜூ, மா.குமரேசன், கும.திருப்பதி, ஆ.மணிகண்டன், கே.ஜெயபாலன் உள்ளிட்டோர் பேசினர். முடிவில் அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ம.வீரமுத்து நன்றி கூறினார்.