கரோனா தொற்று அபாயத்தில் இருந்து காத்துக்கொள்ள பொதுவெளிகளில் நடமாடும்போது, ஒருவருக்கொருவர் குறைந்தட்சம் 3 அடி தூரம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதுடன், முகக்கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் பொதுவெளியில் நடமாடுவோர் முக கவசம் அணிய வேண்டும் என்றும், அணியாத நபர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ் அறிவுறுத்தி இருந்தார். அபராதம் மட்டுமின்றி சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் கடுமையாக எச்சரித்து இருந்தது. ஏப். 16 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஐந்து நாள்களில் மட்டும் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்ததாக 300 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 48 பேருக்கும், அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முக கவசம் அணியாமல் வந்த 87 பேருக்கும், அம்மாபேட்டை மண்டலத்தில் 78 பேருக்கும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 87 பேருக்கும் என மொத்தம் 300 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நாள்களில் இந்நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.