சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள சந்தைதானம்பட்டியைச் சேர்ந்தவர் மயில்சாமி (வயது 27). பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். இவருடைய பெற்றோர் சில ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டனர். இந்நிலையில் மயில்சாமியின் திருமணம், கூழையூர் காட்டுவலவில் உள்ள செங்கார் பூசாரிக்காடு கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் இன்று (மே 4, 2023) நடைபெற்றது.
இந்நிலையில் பெற்றோரை இழந்த மயில்சாமிக்கு, கூழையூர் மற்றும் சந்தைதானம்பட்டி பகுதிகளில் பெரும்பான்மையாக வசிக்கும் வன்னியர் உள்ளிட்ட இதர சமுதாய மக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (02.05.2023) மேளதாளம் முழங்க, சீர்வரிசை தட்டுகளுடன் 2 கி.மீ. தூரம் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். மணமகளுக்கு ஒரு பவுன் தாலி, மாப்பிள்ளைக்கு பட்டு வேட்டி, மணப்பெண்ணுக்கு பட்டு சேலை உள்ளிட்ட சீர்வரிசை பொருள்களைக் கொண்டு சென்றனர். மேலும் புது பானை, சமையல் பாத்திரங்கள், பாய், தலையணை ஆகியவற்றையும் சீர்வரிசையாகக் கொடுத்தனர்.
சாதி வன்கொடுமை புகார்கள் பரவலாக கிளம்பினாலும், சாதி கடந்து ஊர் மக்களின் அன்பைப் பெற்ற, பெற்றோரை இழந்த பட்டியல் சமூக இளைஞரின் திருமணத்தை ஊர் மக்களே ஒன்று கூடி சொந்த வீட்டுத் திருமணம் போல சீர்வரிசை பொருட்களுடன் தடபுடலாக ஏற்பாடுகளைச் செய்து இருந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. சீர்வரிசை ஊர்வல நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர் ராஜா, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தமிழ்வாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.