சேலம் மாவட்டம் மேட்டூர் வனச்சரகர் சிவானந்தன் உத்தரவின் பேரில் வனவர் சரவணன், வனக் காப்பாளர்கள் விமல்ராஜ், திருமுருகன் ஆகியோர் கொளத்தூர் மேட்டூர் சாலையில் காவலர் பயிற்சி பள்ளி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வேகமாக வந்த நான்கு பேரை, வனத் துறையினரைப் பார்த்ததும் தப்பி செல்ல முயன்றனர். அவர்களில் இரண்டு பேரை வனத்துறையினர் விரட்டிச்சென்று மடக்கிப் பிடித்தனர். இருவர் தப்பி ஓடிவிட்டனர்.
அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், 125 டெட்டனேட்டர்கள் இருப்பது தெரிய வந்தது. பிடிபட்ட இருவரும் செங்காற்றூரைச் சேர்ந்த குமார் (35), சக்திவேல் (27) என்பதும், தப்பி ஓடியவர்கள் சேட்டு, ஏழுமலை என்பதும் தெரியவந்தது. கொளத்தூர் மூலக்காடு அருகே கோம்பையில் உள்ள ஒரு கல்குவாரியில் இருந்து டெட்டனேட்டர்களை கடத்தி வந்தது தெரியவந்தது. பிடிபட்ட இருவரையும் வனத்துறையினர் மேட்டூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். கல்குவாரியில் இருந்து திருடி எடுத்துச்செல்லும் டெட்டனேட்டர்களை கொண்டு அவர்கள், நங்கவள்ளியில் பாறைகளை வெடி வைத்து தகர்த்து கற்களை வெட்டி எடுக்க திட்டமிட்டு இருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
அனுமதியின்றியும், பாதுகாப்பற்ற வகையிலும் டெட்டனேட்டர்களை கொண்டு சென்றது குறித்தும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மேட்டூர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.