சேலத்தில் மசாஜ் மையத்தில் வேலை செய்து வந்த மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சேலம் அத்வைத ஆசிரமம் சாலையில், ஒரு வணிக வளாகத்தில் 'தி ராயல் ஹெல்த் ஸ்பா' என்ற பெயரில் மசாஜ் மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்தர் (28) என்ற இளம்பெண் பணியாற்றி வந்தார். இவருடன் அதே மாநிலத்தைச் சேர்ந்த மேலும் நான்கு இளம்பெண்களும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும் அதே சாலையில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
நேற்று இரவு, எஸ்தர் அருகில் உள்ள ஒரு கடைக்குச்சென்று நூடுல்ஸ் பொட்டலம் வாங்கி வந்தார். பின்னர் அதை சமைத்து சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு அவர் பக்கார்டி ரம் என்ற மதுபானத்தைக் குடித்துவிட்டு, படுத்துத் தூங்கிவிட்டார். அதே அறையில் உள்ள மற்ற நால்வரும் எஸ்தருக்கு முன்பே தூங்கி விட்டனர். இந்நிலையில் திங்கள்கிழமை (செப். 23) காலையில் தோழிகள் எழுந்து பார்த்தபோது, எஸ்தர் மட்டும் படுக்கையில் இருந்து எழாமல் இருந்தார். அவரை எழுப்ப முயன்றபோது, எஸ்தர் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
அதிர்ச்சி அடைந்த தோழிகள், மசாஜ் மைய உரிமையாளருக்கு தகவல் அளித்தனர். அவர் இதுபற்றி அழகாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எஸ்தர் இறந்தது குறித்து மிசோரமில் உள்ள அவருடைய பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவருடைய மரணத்திற்குக் காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. எனினும், துரித உணவான நூடுல்ஸ் சாப்பிட்டதால் இறந்தாரா? அல்லது அளவுக்கு அதிகமாக பக்கார்டி ரம் குடித்ததால் மரணம் ஏற்பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. அந்தப் பொருள்களும் உணவுப்பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
எஸ்தர் மரணம் குறித்து அவருடன் ஒரே அறையில் தங்கி பணியாற்றி வந்த மிசோரம் பெண்கள் நால்வரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.