கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்டோர், கேரளா மாநிலத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். தமிழகத்தை விட கேரளாவில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால், அவர்கள் சொந்த ஊர் திரும்ப முடிவெடுத்தனர். அங்கிருந்து எப்படியோ சேலம் வரை வாகனங்களில் வந்து சேர்ந்துவிட்ட அவர்கள், நேற்று (26/03/2020) இரவு சேலத்தை அடுத்த காரிப்பட்டி அருகே சோதனைச்சாவடியில் தங்கியிருந்தனர்.
சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்ல போதிய வாகன வசதியின்றி தடுமாறிக் கொண்டு இருந்தனர். அப்போது சோதனைச்சாவடி அருகே வசிக்கும் பொதுமக்கள் அவர்களுக்கு உணவு, குடிநீர் கொடுத்து உபசரித்தனர். இதையடுத்து அவர்கள் மீண்டும் காலையில் சேலத்தில் இருந்து 104 கி.மீ. தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சிக்கு நடந்தே சென்றனர்.