சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. வனப்பாதுகாப்பு வார விழாவையொட்டி, கல்லூரியின் என்எஸ்எஸ், ஒய்ஆர்சி அமைப்புகள் சார்பில், 'ஒரு மாணவி, ஒரு மரம்' திட்டம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மழை வளத்தைப் பெருக்க மரங்கள் அவசியம். இதைக் கருத்தில் கொண்டு, கல்லூரியில் படிக்கும் ஒவ்வொரு மாணவியும் குறைந்தது ஒரு மரக்கன்றாவது தங்கள் வீடுகள், காலி நிலங்களில் நட்டு பராமரிக்க வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தை வனத்துறையுடன் இணைந்து கல்லூரி நிர்வாகம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் திங்கள்கிழமை (செப். 9) தொடங்கப்பட்ட உடனேயே, கல்லூரி வளாகத்தில் புங்கன், கொய்யா, நெல்லி, ராஜகனி என பத்து வகையான 300 மரக்கன்றுகளை மாணவிகள் நட்டனர். மேலும், கோம்பைப்பட்டி கிராமத்தில் சாலையோரம் மற்றும் காலி நிலங்களில் 200 மரக்கன்றுகளை நடவும் கல்லூரியின் என்எஸ்எஸ் குழு தீர்மானித்துள்ளது.
கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கீதா, கல்லூரியின் என்எஸ்எஸ் திட்ட அலுவலர் பர்வதம், பெரியார் பல்கலை ஒய்ஆர்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட அமைப்பாளர் வடிவேல் ஆகியோர் இத்திட்ட துவக்க விழாவில் பங்கேற்றனர்.