Skip to main content

சேலம் மாவட்டத்தில் 70 வாக்குச்சாவடிகள் இடம் மாறுகிறது; உத்தேச பட்டியல் வெளியீடு!

Published on 08/10/2020 | Edited on 08/10/2020

 

salem district polling booths place changed district collector

 

 

புகைப்பட வாக்காளர் பட்டியல் மீதான சிறப்பு சுருக்க முறை திருத்தம் - 2021க்கான பணிகளை விரைந்து முடிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் புதன்கிழமை (அக். 7) ஆலோசனை நடத்தினார். ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இக்கூட்டம் நடந்தது. புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்குதல், இடமாற்றம் செய்தல், கட்டட மாற்றம் உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் குறித்தும் ஆலோசனை நடந்தது.

 

அப்போது சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறியதாவது: "சேலம் மாவட்டத்தில் 2020- ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த பிப். 14- ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 29 லட்சத்து 68 ஆயிரத்து 673 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 14 லட்சத்து 83 ஆயிரத்து 369 பேர் ஆண் வாக்காளர்கள். பெண் வாக்காளர்கள், 14 லட்சத்து 85 ஆயிரத்து 133 பேர் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 171 பேர் இருக்கிறார்கள். இங்கு மொத்தம் 3276 வாக்குச்சாவடிகள் உள்ளன.

 

வரும் 2021- ஆம் ஆண்டுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வரும் நவம்பர் 16- ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. நவ. 16- ஆம் தேதி முதல் டிச. 15- ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்த பணிகள் நடைபெறும். இப்பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜன. 20- ஆம் தேதி இறுதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

 

தற்போதைய வாக்காளர் பட்டியல்படி, சேலம் மாவட்டத்தில் 1500 வாக்காளர்களுக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்குதல், இடமாற்றம், வாக்குச்சாவடி கட்டட இடமாற்றம் உள்ளிட்ட சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக உத்தேச மாறுதல்கள் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

உத்தேச மாறுதல்களின்படி, மேட்டூர் தொகுதியில் மட்டும் புதிதாக ஒரே ஒரு வாக்குச்சாவடி உருவாக்கப்பட வேண்டும். ஆத்தூர் (தனி) தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளும், ஏற்காடு (தனி) தொகுதியில் 17 வாக்குச்சாவடிகளும், எடப்பாடி தொகுதியில் 6, சங்ககிரி தொகுதியில் 6, சேலம் மேற்கு தொகுதியில் 5, சேலம் வடக்கு தொகுதியில் 11, சேலம் தெற்கு தொகுதியில் 18 வீரபாண்டி தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 70 வாக்குச்சாவடிகள் / கட்டடங்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளன.

 

சங்ககிரி தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளின் பிரிவு மாற்றப்பட வேண்டியுள்ளது. ஏற்காடு தொகுதியில் 7, சேலம் தெற்கு தொகுதியில் 3, வீரபாண்டி தொகுதியில் 13 வாக்குச்சாவடிகளின் பெயர்களும் மாற்றப்பட வேண்டியுள்ளது.

 

இந்த உத்தேச மாறுதல் பட்டியல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இது தொடர்பான ஆலோசனைகள், கருத்துருக்களை தெரிவிக்கலாம். அக்கருத்துகள், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வரும் 14- ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மீதான ஆலோசனைகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வரும் 12- ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்" இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ராமன் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்