சேலம், அருகே பல்வேறு கொலை, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய ரவுடி காட்டூர் ஆனந்தன், காவல்துறை என்கவுண்ட்டருக்கு பயந்து ஓராண்டாக தலைமறைவாக இருந்த நிலையில், திடீரென்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
சேலத்தை அடுத்த வலசையூர் அருகே உள்ள காட்டூரைச் சேர்ந்தவர் ஆனந்தன் என்கிற காட்டூர் ஆனந்தன் (35). இவர் வீராணம் காவல்நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளார். பேருந்து நடத்துநர் சண்முகம் கொலை வழக்கு உள்ளிட்ட 3 கொலை வழக்குகளும், பத்துக்கும் மேற்பட்ட அடிதடி, கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் இவர் மீது இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம், முறுக்கு வியாபாரி கணேசன் (30) கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக காரிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இக்கொலையில் தொடர்புடைய மற்றொரு ரவுடி கதிர்வேலை, காவல்துறையினர் கடந்த ஆண்டு என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.
முறுக்கு வியாபாரி கொலை வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ரவுடி காட்டூர் ஆனந்தன் மட்டும் காவல்துறை என்கவுண்டருக்கு பயந்து திடீரென்று தலைமறைவானார். அவருடைய முன்ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், ஓராண்டுக்கு மேலாக தலைமறைவாக இருந்த ரவுடி ஆனந்தன், கடந்த ஜூன் 15ஆம் தேதி, வாழப்பாடி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை காரிப்பட்டி காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது முறுக்கு வியாபாரியை கொலை செய்தது குறித்து பரபரப்புத் தகவல்களைக் கூறியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ''முறுக்கு வியாபாரி கணேசனை கொலை செய்த கும்பலுக்கு காட்டூர் ஆனந்தன்தான் தலைவனாக இருந்துள்ளார். காட்டூரில் உள்ள கோயிலுக்கு ஆனந்தனின் மாமனார் பூசாரியாக இருந்து வருகிறார். அவரிடம், தனக்கு முதல் மரியாதை கொடுக்க வேண்டும் என முறுக்கு வியாபாரி கணேசன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கணேசனை கொல்ல திட்டமிட்ட ரவுடி காட்டூர் ஆனந்தன், நண்பர்களுடன் சேர்ந்து அவரை தீர்த்துக் கட்டியது தெரிய வந்தது,'' என்றனர்.
இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் ஆத்தூர் கிளைச்சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.