ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி; தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு என்று வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையைத் திறந்து வைத்த பின்னர் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, "மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு 90 நாட்களுக்கு நீர் திறந்து விடப்படும். மேட்டூர் அணை நீர் திறப்பால் பயன்பெறும் 5.22 லட்சம் ஏக்கரில் 3.25 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும். நாமக்கல்லில் ராஜவாய்க்கால் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. பாசனப் பரப்பை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடைமடை வரை நீர் சென்று சேர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் கால்வாய்த் தூர்வாரும் பணிகள் 80% நிறைவடைந்துள்ளது.
குடிமராமத்துப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. குடிமராமத்துப் பணிகளுக்காக கடந்த 4 ஆண்டுகளில் 1,433 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையின் உபரி நீரைக்கொண்டு சேலத்தில் ஜனவரிக்குள் 100 ஏரிகளில் நீர் நிரப்பப்படும். முக்கொம்பில் புதிய கதவணை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து மூன்றாயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.
போக்குவரத்து அதிகம் அடைந்துள்ளதால் சாலைகள் விரிவாக்கம் அவசியம். தேவைக்கேற்ப நிலத்தை கையகப்படுத்தி சாலைகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் நிலங்கள் எடுக்கப்பட்டுதான் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம்; இதற்கு தமிழக அரசு உதவிதான் செய்கிறது. சாலைகள் அமைக்கவிட்டால் எப்படி மக்கள் பயணம் செய்ய முடியும்" என்று கேள்வி எழுப்பினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, "சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி; தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு என வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தடுப்பதற்கான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதை மக்கள் தவிர்ப்பது வேதனையளிக்கிறது. பெரும்பாலானோர் மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றி வருகின்றனர். கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கரோனா கட்டுக்குள் வந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும்; தனித்தேர்வர்களுக்கு சலுகை பற்றி அறிவிக்கப்படும். தனியார் பள்ளிகள் கட்டண வசூல் செய்வது பற்றி புகாரளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.