சேலத்தில், உடலை விட்டு ஆன்மா பிரியவில்லை என்பதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவரை, உறவினர்களே இரவு முழுவதும் குளிர் சாதனப் பெட்டியில் கிடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் கந்தம்பட்டியில் உள்ள பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன் (70). இவருடைய அண்ணன் பாலசுப்ரமணிய குமார். உடல்நலம் சரியில்லாமல் தனது அண்ணன் இறந்துவிட்டதாகக் கூறி, திங்கள்கிழமை (அக்., 12) குளிர்சாதனப் பெட்டி (ஃபிரீசர் பாக்ஸ்) கடைக்காரருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் குளிர்சாதனைப் பெட்டி நிறுவன ஊழியர்கள் சரவணன் வீட்டிற்கு வந்து குளிர்சாதனப் பெட்டியை வைத்துவிட்டு, மறுநாள் வந்து எடுத்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (அக். 13) சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்கள் குளிர்சாதனப் பெட்டியை எடுத்துச் செல்வதற்காக சரவணன் வீட்டிற்கு வந்தனர். யார் இறந்துவிட்டதாகச் சொல்லி, சடலத்தை வைப்பதற்காக குளிர்சாதனப் பெட்டி வேண்டும் என்று கேட்டார்களோ, அவர் அந்தப் பெட்டிக்குள் உயிருடன் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த முதியவர் இரவு முழுவதும் குளிர்சாதனப் பெட்டிக்குள் உயிருக்குப் போராடி வந்துள்ளார்.
விவகாரம் வேறு மாதிரியாக இருக்குமோ என்று சந்தேகம் எழுந்ததால், குளிர்சாதனப் பெட்டியைக் கொண்டு வந்த ஊழியர்களே இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் உடனடியாக வந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பாலசுப்ரமணிய குமாரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பாலசுப்ரமணிய குமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். நீண்ட நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இறந்துவிட்டதாகக் கூறி, அவருடைய தம்பி சரவணன் மற்றும் உறவினர்கள் ஃபிரீசஸ் பாக்ஸை வரவழைத்து, அதற்குள் பாலசுப்ரமணிய குமாரை கிடத்தியுள்ளனர்.
மறுநாள் குளிர்சாதனப் பெட்டியை எடுத்துச் செல்ல வந்த ஊழியர்கள், அவர் உயிருடன் இருப்பதாகக் கூறியுள்ளனர். அதற்கு சரவணன், அண்ணனின் ஆன்மா இன்னும் உடலை விட்டுப் பிரியவில்லை. அதனால்தான் அவருடைய உயிர் பிரியும் வரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருக்கிறோம். இன்னும் சிறிது நேரத்தில் அவர் இறந்து விடுவார் என்று கூறி ஊழியர்களை திருப்பி அனுப்பியுள்ளது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து உடலை பரிசோதித்தபோது பாலசுப்ரமணிய குமார் உயிருடன் இருப்பது தெரியவந்தது. அதன்பிறகே ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லப்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முதியவரை உடன் பிறந்த தம்பியே, குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து இறந்து விட்டதாக நாடகம் ஆடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.