சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (77). முன்னாள் எம்பி. ஜூன் 28- ஆம் தேதியன்று மேச்சேரி அருகே உள்ள தன்னுடைய தோட்டத்திற்குச் சென்றுவிட்டு, இரவு கார் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
ஓமலூர் சோதனைச் சாவடி அருகே, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த இரும்பாலை காவல்துறையினர், வாகன ஆவணங்கள் கேட்டுள்ளனர். தான் ஒரு முன்னாள் எம்.பி. என்று பதில் கூறிய அவரிடம், அதற்கான அடையாள அட்டையைக் கேட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அர்ஜூனன், பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ. ரமேஷ் என்பவரை காலால் எட்டி உதைத்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக எஸ்.எஸ்.ஐ. ரமேஷ் அளித்த புகாரின்பேரில், ஜூன் 29- ஆம் தேதி, அர்ஜூனன் மீது ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், பொது ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய இரண்டு பிரிவுகளில் மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், அர்ஜூனனும் சேலம் மாநகர காவல்துறை ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு புகார் அளித்துள்ளார். புகார் குறித்து அர்ஜூனன் கூறியதாவது:
''சேலத்தில் இருந்து ஓமலூரில் உள்ள தோட்டத்திற்கு தினமும் சென்று வருவேன். சோதனைச் சாவடியில் என் காரை நிறுத்திய காவலர்கள், இ-பாஸ் கேட்டனர். நான் உள்ளூர்தான் என்று கூறினேன். வண்டியின் பதிவு எண்ணும் சேலத்திற்கு உரியதுதான் என்றும் கூறினேன். இதையெல்லாம் அவர்கள் ஏற்காததால், அடுத்து நான் ஒரு முன்னாள் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. என்றேன். அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? அடையாள அட்டை இருந்தால் காட்டுமாறு கூறினர். இதையெல்லாம் நான் நெத்தியிலா எழுதி ஒட்டியிருக்க முடியும்? என்று கேட்டேன். உடனே காவலர்கள், வண்டியில் இருந்து இறங்கி வந்து அய்யாவிடம் பதில் சொல்லுங்கள் என்றனர்.
அப்போது திடீரென்று எஸ்.எஸ்.ஐ. ரமேஷ், என்னை நெஞ்சில் கை வைத்து தள்ளினார். வண்டியில் இருந்து அவனை இழுத்து வெளியே போடுங்கடா என்று ஒருமையில் பேசியதால்தான் இந்தச் சம்பவம் நடந்தது. காவல்துறையினரின் அராஜகம் எல்லை மீறி போய்விட்டது. சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாமல் வரும் வண்டிகளை மடக்கி அபராதம் என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்துகின்றனர். இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையருக்கு மின்னஞ்சலில் புகார் அளித்திருக்கிறேன்,'' என்றார்.