விழா ஒன்றில் பேசிக்கொண்டிந்தபோது ஆம்பிளிபயர் வெடித்து கரும்புகை வந்ததால் பேசிக்கொண்டிருந்த நடிகர் எஸ்.வி.சேகர் உள்பட மேடையில் இருந்தவர்கள் அலறிஅடித்து ஓடினர்.
சென்னை எண்ணூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைப்பெற்றது. நடிகர் எஸ்.வி.சேகர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மேடையில் இருந்தபடியே மாணவர்களிடையே எஸ்.வி.சேகர் மைக்கில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மேடை அருகே இருந்த ஆம்பிளிபயர் திடீரென்று பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் விழாவில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், ஆம்பிளிபயர் வெடித்ததால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்ததோடு மின்சாரமும் தடைபட்டது.
அப்போது எஸ்.வி.சேகர் உள்பட மேடையில் இருந்த பிரமுகர்களும், விழாவை பார்த்துக்கொண்டிருந்த மாணவ-மாணவிகளும் அலறியடித்து கொண்டு ஓடினர். உடனே மைக், செட் அமைத்த தொழிலாளர்கள் அந்த ஆம்பிளிபயரை அகற்றினர். பின்னர் ஜெனரேட்டர் மூலம் மின்சப்ளை கொடுத்தனர். இதனையடுத்து மீண்டும் விழா தொடங்கியது. பேச்சை பாதியில் விட்ட நடிகர் எஸ்.வி.சேகர் தொடர்ந்து பேசினார்.