சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள இலத்துவாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த மினி கிளினிக் திறப்பால் கவர்ப்பனை, திட்டச்சேரி, கிழக்கு ராஜப்பாளையம் மக்கள் பயனடைவர். சேலம் மாவட்டத்தில் மட்டும் 100 அம்மா மினி கிளினிக் திறக்கப்படவுள்ள நிலையில் முதற்கட்டமாக 34 மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "ஊரக பகுதி விவசாயிகள் அனைவருக்கும் மருத்துவ சேவை கிடைக்கத் தொடங்கப்பட்டதே 'அம்மா' மினி கிளினிக். கிராமத்தில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனை ஏற்பட்டால் உடனடி சிகிச்சைப் பெறலாம். தலைவாசலில் கால்நடை பூங்கா கட்டி முடிக்கப்பட்ட பின் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி உலகளவில் புகழ் பெறும். தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நனவானது. இந்த ஆண்டு அரசுப்பள்ளி மாணவர்கள் 313 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். யாரும் கோரிக்கை வைக்காமலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியுள்ளோம். இந்தியாவில் கரோனா இறப்பு விகிதத்தைக் குறைத்த மாநிலம் தமிழகம். தமிழக அரசு மீது திட்டமிட்டே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன" என்றார்.